IPL TAMILTAMIL

‘பவர்-பிளே’யில் பந்து வீச வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி; பெங்களூரு வீரர் வாஷிங்டன் சுந்தர் பேட்டி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு – மும்பை இடையிலான பரபரப்பான ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 201 ரன்கள் எடுத்து சமநிலை ஏற்பட்ட பிறகு சூப்பர் ஓவரில் பெங்களூரு அணி வெற்றிக்கனியை பறித்தது.

ரன்மழை பொழியப்பட்ட இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்களில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் (மும்பை கேப்டன் ரோகித் சர்மாவை அவுட் செய்தார்) வீழ்த்தி பிரமாதப்படுத்தினார்.

இத்தனைக்கும் ‘பவர்-பிளே’யில் 3 ஓவர்கள் துணிச்சலுடன் வீசி சிக்கனத்தை காட்டினார். அவரது பந்து வீச்சில் ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை.

இதுகுறித்து தமிழகத்தை சேர்ந்த 20 வயதான வாஷிங்டன் சுந்தர் கூறியதாவது:-

சில திட்டங்களுடன் இந்த ஆட்டத்திற்கு வந்தேன். ‘பவர்-பிளே’யில் பந்து வீச வாய்ப்பு வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்தேன். ‘பவர்-பிளே’யில் நான் அனுபவித்து உற்சாகமாக பந்து வீசுகிறேன்.

என் மீது கேப்டனும், அணி நிர்வாகமும் இந்த அளவுக்கு நம்பிக்கை வைத்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.

இன்னும் நிறைய ஆட்டங்கள் உள்ளன. தொடர்ந்து இதே போல் பந்து வீசி அணியின் வெற்றிக்கு பங்காற்ற வேண்டும்.

தன்னிடம் அணி நிர்வாகம் என்ன எதிர்பார்க்கிறதோ? அதை சந்தோஷமாக செய்யக்கூடியவர், டிவில்லியர்ஸ். பல ஆண்டுகளாக அவர் பெங்களூரு அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் விக்கெட் கீப்பிங் பணியை ஏற்றுக் கொண்டிருப்பது அணியின் சரிசம கலவைக்கு உதவுகிறது. இதன் மூலம் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது பந்து வீச்சாளரை சேர்க்க முடிகிறது. அத்துடன் விக்கெட் கீப்பராக இருப்பதால் பந்து வீச்சாளர்களுக்கும் பயனுள்ள ஆலோசனைகளை வழங்குகிறார். இவ்வாறு வாஷிங்டன் சுந்தர் கூறினார்.

இதற்கிடையே வாஷிங்டன் சுந்தருக்கு பாராட்டு தெரிவித்துள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, ‘இந்த பேட்டிங் உலகில் சென்னையில் இருந்து வந்துள்ள வாஷிங்டன் கலக்கியுள்ளார். 2020-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் இதுவரை நடந்துள்ள ஆட்டங்களில் இதுவே மிகச்சிறந்த செயல்பாடு’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker