CRICKETLATEST UPDATESNEWSTAMIL
பயிற்சி ஆட்டம்: 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா ‘ஏ’ அணியின் 2 வீரர்கள் சதம்- போட்டி டிரா
ஆஸ்திரேலியா ‘ஏ’- இந்தியா இடையிலான 2-வது பயிற்சி ஆட்டம் சிட்னியில் நடைபெற்றது. பகல் – இரவு போட்டியான இதில் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பும்ரா 55 ரன்கள் அடிக்க, மற்ற வீரர்கள் சொதப்ப இந்தியா 194 ரன்னில் சுருண்டது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ‘ஏ’ இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 108 ரன்னில் சுருண்டது. முகமது ஷமி மற்றும் நவ்தீப் சைனி ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
86 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. ஹனுமா விஹாரி (104), ரிஷப் பண்ட் (103) ஆகியோர் சிறப்பாக விளையாடி சதம் அடிக்க இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 386 ரன்கள் குவித்தது.
இன்றைய 3-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் இந்தியா 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அதன்பின் 473 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ‘ஏ’ களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ஹாரிஸ் (5), ஜோ பேர்ன்ஸ் (1), நிக் மேடின்சன் (14) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், பென் மெக்டெர்போட் (107), ஜேக் வைல்டர்முத் (111) சதம் அடிக்க ஆஸ்திரேலியா ஏ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் அடித்திருந்தது.
அப்போது இரு அணி கேப்டன்களும் போட்டியை முடித்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தனர். இதனால் போட்டி டிராவில் முடிந்தது.