TAMIL
பயிற்சியாளராக உருவெடுக்கிறார் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்… நெகிழ வைக்கும் பின்னணி காரணம்
அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட கட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்ட நடத்தப்படும் புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் போட்டியில் இந்திய துடுப்பாட்ட ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மேற்கிந்திய வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் கோர்ட்னி வால்ஷ் ஆகியோர் பயிற்சியாளராக திகழவுள்ளனர்.
புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் போட்டியில் மோதும் பாண்டிங் லெவன் அணிக்கு சச்சினும், வார்ன் லெவன் அணிக்கு கோர்ட்னி வால்ஷ்-ம் பயிற்சியாளராக இருப்பார்கள்.
பிப்ரவரி 8 ம் திகதி டி-20 நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவின் நிதி திரட்டும் முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.
இதில் முன்னாள் அவுஸ்திரேலிய நட்சத்திரங்களில் ரிக்கி பாண்டிங் மற்றும் ஷேன் வார்ன் ஆகியோர் அடங்குவர்.
அவர்களுடன் ஜஸ்டின் லாங்கர், ஆடம் கில்கிறிஸ்ட், பிரட் லீ, ஷேன் வாட்சன், அலெக்ஸ் பிளாக்வெல் மற்றும் மைக்கேல் கிளார்க் ஆகியோரும் அடங்குவர்.
சச்சின் மற்றும் கோர்ட்னியை அவுஸ்திரேலியாவுக்கு மீண்டும் வரவேற்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.
இங்கு அவர்கள் இருவரும் வீரர்களாக நிறைய வெற்றிகளைப் பெற்றனர், மேலும் சிறப்பு நாளாக அமையவிருக்கும் விஷயத்தில் அவர்கள் ஈடுபட நாங்கள் காத்திருக்கிறோம் என்று அவுஸ்திரேலிய கிரிக்கெட் தலைமை நிர்வாகி கெவின் ராபர்ட்ஸ் கூறினார்.
இருவரும் ஐசிசி-யில் மிகவும் பிரபலமானவர்கள், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர் சச்சின், 500க்கும் மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியவர் கோர்ட்னி என கெவின் புகழ்ந்தார்.
பிப்ரவரி 8ம் திகதி அன்றே மூன்று போட்டிகள் விளையாடப்படும், மெல்போர்னில் அவுஸ்திரேலியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பெண்கள் டி20 போட்டியில் தொடங்கி, அதைத் தொடர்ந்து புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் மற்றும் பிபிஎல் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
போட்டி நடைபெறும் மைதானதம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
அந்த நாளில் திரட்டப்பட்ட நிதி அவுஸ்திரேலிய செஞ்சிலுவை சங்க பேரிடர் நிவாரணம் மற்றும் மீட்பு நிதிக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.