TAMIL
பயமாக உள்ளது! இத்தாலியில் இருந்து வரும் தகவல்கள் ஏமாற்றம் தருகிறது… தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் கவலை
கொரோனா வைரஸ் காரணமாக உலகமே முடங்கிப் போய் கிடக்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் விஜய் ஷங்கரும் வீட்டில் சும்மா அமர்ந்து இருப்பதாக கூறி உள்ளார்.
கொரோனா வைரஸ் உலகில் சுமார் 180 நாடுகளுக்கும் மேல் பரவி விட்டது.
இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் முடங்கிப் போய் உள்ளன.
இந்தியாவின் பிரம்மாண்ட தொடரான ஐபிஎல் தொடரும் இதில் அடக்கம்.
அந்த தொடர் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மார்ச் 29 அன்று துவங்க வேண்டிய ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15 வரை தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னும் ஐபிஎல் தொடங்க வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.
இந்த நிலையில் அது குறித்து பேசிய தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் விஜய் ஷங்கர், எனது ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் இருந்து எனக்கு எந்த மெசேஜும் வரவில்லை.
ஆனால், இந்த சூழ்நிலையில் எதுவும் நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை.
எனக்கு பயமாக உள்ளது. நான் வீட்டில் எதுவும் செய்யாமல் சும்மா அமர்ந்து இருக்கிறேன்.
ஐபிஎல் அல்லது கிரிக்கெட் பற்றி நான் அதிகம் சிந்திக்கவில்லை. ஏனெனில், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக பீதியாக உள்ளது.
இத்தாலி, மற்றும் பிற நாடுகளில் இருந்து வரும் தகவல்கள் மிகவும் ஏமாற்றமாக உள்ளது. இப்போது நான் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதை பற்றித் தான் சிந்தித்து கொண்டு இருக்கிறேன் என கூறியுள்ளார்.