ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு துபாயில் நடந்த 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப்புடன் மோதியது.
இதில் ‘டாஸ்’ ஜெயித்த பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் லோகேஷ் ராகுலும், மயங்க் அகர்வாலும் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நுழைந்தனர்.
அவசரம் காட்டாமல் நிதானமாக ஆடிய இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் தந்தனர்.
மயங்க் அகர்வால் 26 ரன்களில் (19 பந்து, 3 பவுண்டரி) பியுஷ் சாவ்லாவின் சுழலில் சிக்கினார்.
அடுத்து வந்த மன்தீப்சிங் தனது பங்குக்கு 27 ரன்கள் (16 பந்து, 2 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினார்.
இதைத் தொடர்ந்து லோகேஷ் ராகுலும், நிகோலஸ் பூரனும் ஜோடி போட்டு ஸ்கோரை எகிற வைக்கும் முனைப்புடன் ஆக்ரோஷமாக ஆடினர்.
ஜடேஜாவின் பந்து வீச்சில் பூரனும், ஷர்துல் தாகூரின் ஓவரில் ராகுலும் சிக்சர், பவுண்டரிகளை சாத்தினர்.
ராகுல் தனது 18-வது அரைசதத்தை நிறைவு செய்தார்.
16 ஓவர்களில் அந்த அணி 2 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்திருந்ததை பார்த்த போது, 200 ரன்களை நெருங்கும் போல் தோன்றியது.
ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் கடைசி கட்டத்தில் ரன்வேகம் சற்று தளர்ந்தது.
நிகோலஸ் பூரன் 33 ரன்களிலும் (17 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), லோகேஷ் ராகுல் 63 ரன்களிலும் (52 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆனார்கள்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுக்கு 178 ரன்கள் சேர்த்தது.
சர்ப்ராஸ் கான் 14 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 11 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
சென்னை தரப்பில் ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், ஜடேஜா, பியுஷ் சாவ்லா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து 179 ரன்கள் இலக்கை நோக்கி சென்னை அணி ஆடியது.
தொடக்க ஆட்டக்காரர்கள் ஷேன் வாட்சனும், பாப் டு பிளிஸ்சிசும் தங்களை நிலைநிறுத்திக்கொண்டு அபாரமாக ஆடினர்.
முந்தைய ஆட்டங்களில் சொதப்பியதால் கடும் விமர்சனத்திற்குள்ளான வாட்சன் அதற்கு பரிகாரம் தேடும் வகையில் மட்டையை பக்குவமாக சுழட்டினார்.
பிளிஸ்சிஸ்சின் பேட்டிங்கும் நேர்த்தியாக இருந்தது. கிறிஸ் ஜோர்டானின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசினார்.
பவர்-பிளேயில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் திரட்டியது. இந்த கூட்டணியை உடைக்க பஞ்சாப் கேப்டன் ராகுல் யுக்திகளை பலவாறு மாற்றி அமைத்தும் கடைசி வரை பலன் இல்லை.
வாட்சன், சர்வசாதாரணமாக பந்துகளை எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டார்.
இதில் ஒரு பந்து 101 மீட்டர் தூரத்திற்கு பறந்தது. இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் சென்னை அணியின் வெற்றிப்பயணம் சுலபமானது.
ஷமியின் பந்து வீச்சில் சிக்சர், பவுண்டரியுடன் ஆட்டத்தை பிளிஸ்சிஸ் தித்திப்பாக முடித்து வைத்தார்.
சென்னை அணி 17.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 181 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது.
வாட்சன் 83 ரன்களுடனும் (53 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்), பிளிஸ்சிஸ் 87 ரன்களுடனும் (53 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர்.
5-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது 2-வது வெற்றியாகும்.
தொடர்ந்து 3 தோல்விகளுக்கு பிறகு வெற்றிப்பாதைக்கு திரும்பியிருக்கிறது.
அதே சமயம் பஞ்சாப் அணிக்கு இது 4-வது அடியாகும்.