CRICKETTAMIL

பங்களாதேஷ் வீரருக்கு கொவிட்-19 தொற்று சந்தேகம்!

இலங்கை சுற்றுப் பயணத்துக்கான தயார்படுத்தல்களை துரிதமாக முன்னெடுக்கும் நோக்கில், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தனிநபர் பயிற்சிகளை நிறைவுசெய்து, திறன் பயிற்சிகளை நடத்தியுள்ளது. இந்தநிலையில், பயிற்சிகளில் ஈடுபட்ட வீரர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகிப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை குறிப்பிட்டுள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வசதிகளை பயன்படுத்தி கடந்த ஜூலை 17ம் திகதி முதல் வீரர்கள் தனிநபராகவும், சிறிய குழாமாகவும் பயிற்சிகளை பெறுவதற்கு, பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அனுமதி வழங்கியிருந்தது.

அத்துடன், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை 27 பேர்கொண்ட குழாத்தை இலங்கை தொடருக்காக அறிவித்திருந்ததுடன், அவர்கள் தற்போது திறன் பயிற்சிகளை நிறைவுசெய்த பின்னர், பேன் பசுபிக் ஹோட்டலில் கொவிட்-19 உயிரியல் பாதுகாப்பு முறையை பின்பற்றுவதற்காக தங்கவைக்கப்படவுள்ளனர்.

இந்தநிலையில், வீரர்களின் திறன் பயிற்சியின் போது, வீரர் ஒருவருக்கு கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கான மறைமுக அறிகுறிகள் காணப்படுவதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. குறித்த வீரருக்கான கொவிட்-19 பரிசோதனையில், அவருக்கு கொவிட்-19 தொற்று இல்லை என்ற போதும், பரிசோதனையின் இறுதிக்கட்டத்திலேயே இது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதன்காரணமாக கொவிட்-19 மறைமுக அறிகுறிகள் காணப்படும் வீரருடன் நெருங்கி பழகிய கிரிக்கெட் வீரர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு நாளைய தினம் (22) கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளவுள்ளது. பின்னர் அவர்கள் அணியுடன் இணைவார்கள் என பங்களாதேஷ் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், தன்னுடைய மனைவி குழந்தை பிரசவிக்கவுள்ளதால், அங்கு செல்வதற்கு மெஹிதி ஹசன், பங்ளாதேஷ் கிரிக்கெட் சபையிடம் அனுமதி கோரியிருந்தார். எனினும், பின்னர், இலங்கை சுற்றுப் பயணத்தில் உள்ள விதிமுறைகளை கருத்திற்கொண்டு, அணியுடன் பயிற்சிகளில் இணைவதற்கு முடிவுசெய்துள்ளார்

இதுதொடர்பில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் கருத்து வெளியிடுகையில், “மெஹிதி ஹசனுடைய மனைவி குழந்தை பிரசவிக்க இருப்பதால், அவர் எம்மிடம் பயிற்சிகளில் இருந்து வெளியேற அனுமதி கோரியிருந்தார். இருப்பினும், இலங்கை சுற்றுப் பயணத்தில் உள்ள அம்சங்களை கேட்டறிந்த அவர், அணியுடன் தொடர்ந்தும் பயிற்சிகளில் இருப்பதற்கு சம்மதம் தெரிவித்தார்” என்றார்.

மெஹிதி ஹசன் அணியில் இணைந்திருக்கும் அதேவேளை, நீண்ட நாட்களாக டெஸ்ட் குழாத்துக்குள் இடம்பிடிக்க வாய்ப்பை தேடியிருந்த மொஹமதுல்லாஹ், மீண்டும் டெஸ்ட் குழாத்துக்குள் இடம்பிடித்துள்ளார். இவர், தற்போது பங்களாதேஷ் அணியின் திறன் பயிற்சிகளை நிறைவுசெய்துள்ளார்.

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான தொடர், ஜூலை மாத மத்திய பகுதியில் நடைபெறவிருந்த போதும், கொவிட்-19 தொற்று காரணமாக எதிர்வரும் ஒக்டோபர் 23ம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுத் தொடருக்காக இம்மாதம் 27ம் திகதி பங்களாதேஷ் அணி புறப்படவுள்ளதுடன், இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகள் கண்டியில் நடைபெறவுள்ளதுடன், இறுதி டெஸ்ட் போட்டி கொழும்பில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker