TAMIL
பகல்-இரவு டெஸ்டில் இந்தியா ஆதிக்கம்: கோலி அபார சதம்; வங்காளதேசம் போராட்டம்
இந்தியா – வங்காளதேசம் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. பகல்-இரவு ஆட்டமாக பிங்க் நிற பந்தில் நடத்தப்படும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 106 ரன்னில் சுருண்டது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி 59 ரன்களுடனும், துணை கேப்டன் ரஹானே 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் 2-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். முதல் 15 நிமிடங்களில் 4 பவுண்டரிகளை ஓடவிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்திய கோலி நிலைத்து நின்று அட்டகாசப்படுத்தினார். வழக்கமான அவரது ‘கவர்டிரைவ்’ ஷாட்டுகள் பரவசப்படுத்தின. மறுமுனையில் அரைசதத்தை கடந்த ரஹானே 51 ரன்களில் (69 பந்து, 7 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்து ரவீந்திர ஜடேஜா வந்தார்.
எதிரணி பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய விராட் கோலி தனது 27-வது செஞ்சுரியை நிறைவு செய்தார். இதன் மூலம் பகல்-இரவு டெஸ்டில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற மகத்தான சிறப்பையும் பெற்றார். அதன் பிறகு வேகப்பந்து வீச்சாளர் அபுஜெயத்தின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகளை தெறிக்கவிட்டு அசத்தினார். ஆனால் ரவீந்திர ஜடேஜா (12 ரன்) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அபு ஜெயத் வீசிய பந்து ஆப்-ஸ்டம்புக்கு வெளியே செல்வதாக நினைத்து பேட்டை உயர்த்த, அவரது கணிப்புக்கு மாறாக பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது.
அணியின் ஸ்கோர் 308 ரன்களாக உயர்ந்த போது, கேப்டன் கோலி (136 ரன், 194 பந்து, 18 பவுண்டரி) விக்கெட்டை பறிகொடுத்தார். வேகப்பந்து வீச்சாளர் எபாதத் ஹூசைன் சற்று ஷாட்பிட்ச்சாக வீசிய பந்தை லெக்சைடில் தட்டி விட்ட போது, ‘பைன்லெக்’ திசையில் தைஜூல் இஸ்லாம் பாய்ந்து விழுந்து பிரமாதமாக பிடித்தார்.
மகிழ்ச்சியை கொண்டாடிய பவுலர் எபாதத் ஹூசைன், தனக்கே உரிய பாணியில் கம்பீரமாக ஒரு ‘சல்யூட்’ அடித்தார். கோலி அதை கண்டுகொள்ளாமல் சிரித்த முகத்தோடு பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து பின்வரிசை வீரர்கள் இறங்கிய வேகத்தில் நடையை கட்டினர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 347 ரன்கள் குவித்த நிலையில் ‘டிக்ளேர்’ செய்தது.
இதையடுத்து 241 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி, இந்திய வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்தது. முதல் ஓவரிலேயே ஷத்மன் இஸ்லாம் (0) இஷாந்த் ஷர்மாவின் வேகத்தில் காலியானார். அவரது அடுத்த ஓவரில் கேப்டன் மொமினுல் ஹக்கும் (0) சிக்கினார். முகமது மிதுன் (6), இம்ருல் கேயஸ் (5 ரன்) ஆகியோரும் போராட்டமின்றி பணிந்தனர். 13 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி தத்தளித்ததால் ஆட்டம் 3-வது நாளுக்கு போகுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நெருக்கடியான கட்டத்தில் அனுபவ வீரர் முஷ்பிகுர் ரஹிம், மின்னொளியில் தாக்குப்பிடித்து அணியை ஓரளவு கவுரவமான நிலைக்கு நகர்த்தி சென்றார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு தந்த மக்முதுல்லா (39 ரன், 41 பந்து, 7 பவுண்டரி) துரதிர்ஷ்டவசமாக தசைப்பிடிப்பால் பாதியில் வெளியேற நேரிட்டது.
அவரது விலகல் அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. ஒரு பக்கம் முஷ்பிகுர் ரஹிம் மல்லுகட்ட, இன்னொரு முனையில் மேலும் 2 விக்கெட் சரிந்தன. முஷ்பிகுர் ரஹிமுக்கும், கடைசி நேரத்தில் அஸ்வினின் சுழலில் நடுவர் எல்.பி.டபிள்யூ. வழங்கினார். ஆனால் டி.ஆர்.எஸ். உதவியை நாடிய போது, பந்து முதலில் கையுறையில் உரசியது தெரிந்ததால் தப்பினார்.
2-வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேச அணி 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 152 ரன்கள் எடுத்துள்ளது. முஷ்பிகுர் ரஹிம் 59 ரன்களுடன் (70 பந்து, 10 பவுண்டரி) அவுட் ஆகாமல் உள்ளார். முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை அள்ளிய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா இந்த இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
வங்காளதேச அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 89 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளன. அதிலும் காயத்தால் அவதிப்படும் மக்முதுல்லா மீண்டும் களம் காணுவது சந்தேகம் தான். எனவே இந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.
இன்றைய 3-வது நாளில் ஆட்டம் முதல் பகுதியிலேயே முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேப்டன்ஷிப்பில் அதிக சதங்கள்: பாண்டிங்கின் சாதனையை சமன் செய்தார், கோலி
* வங்காளதேசத்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் இந்திய கேப்டன் விராட் கோலி 136 ரன்கள் விளாசினார். இது டெஸ்டில் அவரது 27-வது சதமாகும். கேப்டனாக அவரது 20-வது சதமாகும். இதன் மூலம் டெஸ்டில் அதிக சதங்கள் அடித்த கேப்டன்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங்கை (19 சதம்) பின்னுக்கு தள்ளினார். இந்த சாதனை வரிசையில் தென்ஆப்பிரிக்காவின் கிரேமி சுமித் (25 சதம்) முதலிடம் வகிக்கிறார்.
* ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் அரங்கில் (டெஸ்ட், ஒரு நாள், 20 ஓவர் போட்டியை சேர்த்து) கேப்டனாக கோலி 41 சதங்கள் எடுத்துள்ளார். கேப்டன்ஷிப்பில் அதிக சர்வதேச சதங்கள் நொறுக்கியவரான ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங்கின் சாதனையை (இவரும் 41 சதம்) சமன் செய்துள்ளார்.
* மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியையும் சேர்த்து விராட் கோலி ஒரு வீரராக இதுவரை 70 சதங்கள் (டெஸ்ட் 27, ஒரு நாள் போட்டி 43) ருசித்துள்ளார். 70 சதங்களை வேகமாக எட்டியவர் (438 இன்னிங்ஸ்) என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார். அதிக சர்வதேச சதங்கள் எடுத்தவர்களில், இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (100 சதம்), ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் (71 சதம்) முதல் இரு இடங்களில் உள்ளனர்.