TAMIL
‘நீண்ட கால இலக்கு பலன் தராது’ – ரோகித் சர்மா சொல்கிறார்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் இருப்பதால் வீட்டில் முடங்கி கிடக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசுகையில் கூறியதாவது:-
“நீண்ட கால இலக்கு உங்களுக்கு எந்தவகையிலும் உதவாது என்பதை கடந்த கால அனுபவத்தின் மூலம் நான் உணர்ந்து இருக்கிறேன். மாறாக அது உங்களுக்கு நெருக்கடியையும், அழுத்தத்தையும் அதிகரிக்கும்.
நான் எப்பொழுதும் குறுகிய கால இலக்கை நிர்ணயித்து தான் கவனம் செலுத்துவேன்.
அதிலும் முக்கியமாக அடுத்த 2-3 மாதங்களில் வரும் சில ஆட்டங்கள் குறித்தும், யாருக்கு எதிராக விளையாடுகிறோம். அதில் என்னால் என்ன சிறப்பாக செய்ய முடியும் என்பது குறித்து தான் சிந்திப்பேன்.
ஒவ்வொரு தொடர் அல்லது ஒவ்வொரு போட்டிக்கு என்று தனியாக இலக்கு நிர்ணயித்து செயல்படுவது எனக்கு நிறைய உதவிகரமாக இருக்கிறது.
வருங்காலத்திலும் இந்த முறையையே தொடர்ந்து பின்பற்ற நான் விரும்புகிறேன்.
கொரோனா வைரஸ் தாக்கம் தணிந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
அதற்காக காத்து இருக்கிறேன். ஆனால் நாங்கள் மீண்டும் எப்போது கிரிக்கெட் விளையாட தொடங்குவோம் என்பது தெரியாது.
நாங்கள் மீண்டும் விளையாட ஆரம்பிக்கையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியா? அல்லது ஐ.பி.எல். போட்டியா? நமது வழியில் வருகிறது என்பதை பார்க்க வேண்டும்.
நாங்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பெரிய போட்டி தொடரில் விளையாடவும் திட்டமிடப்பட்டு இருக்கிறது.
நாங்கள் யாருக்கு எதிராக விளையாட போகிறோம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மராட்டியத்தை சேர்ந்த 33 வயது ஹிட்மேனான ரோகித் சர்மா 32 டெஸ்ட் போட்டியில் விளையாடி 6 சதம் உள்பட 2,141 ரன்னும், 224 ஒருநாள் போட்டியில் ஆடி 29 சதம் உள்பட 9,115 ரன்னும், 108 இருபது ஓவர் போட்டியில் ஆடி 4 சதம் உள்பட 2,773 ரன்னும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.