TAMIL
நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ‘நம்பர் ஒன்’ அணிக்கு தகுந்த மாதிரி விளையாடுவதே குறிக்கோள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கருத்து
நியூசிலாந்துக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற எங்களுக்கு இன்னும் 100 புள்ளிகள் தேவையாகும்.
இந்த ஆண்டில் நாங்கள் வெளிநாட்டு மண்ணில் 6 டெஸ்ட் போட்டிகளில் (நியூசிலாந்துக்கு எதிரான 2 ஆட்டம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 ஆட்டம்) விளையாட இருக்கிறோம்.
அதில் இரண்டு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு நல்ல நிலையில் இருப்போம்.
இதுவும் எங்களது ஒரு குறிக்கோளாகும்.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் உலகின் ‘நம்பர் ஒன்’ அணி என்ற அந்தஸ்துக்கு தகுந்தபடி விளையாட வேண்டும் என்று விரும்புகிறோம்.
ஏனெனில் அந்த மாதிரி விளையாடுவதில் தான் மற்றவர்களை விட நாங்கள் அதிக நம்பிக்கை வைத்து இருக்கிறோம்.
டெஸ்ட் போட்டியில் நாங்கள் இதைத்தான் எதிர்நோக்குகிறோம்.
இந்த ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி இருப்பதால் 20 ஓவர் போட்டியில் தான் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்.
ஒருநாள் போட்டி முடிவால் பாதிப்பில்லை.
தற்போது இந்த டெஸ்ட் தொடரில் எங்கள் முழு கவனமும் உள்ளது.
தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்வி ஷா, சுப்மான் கில் வியப்புக்குரிய திறமை படைத்தவர்கள்.
வெலிங்டன் டெஸ்ட் போட்டியில் ஆடும் லெவன் அணியில் யாருக்கு இடம் கிடைக்கும் என்பதை விட, இருவரும் இங்கு அணியில் இருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
அவர்களுக்கு வானம் தான் எல்லை என்பது தெரியும்.
சுப்மான் கில் அசாதாரணமான திறமை கொண்டவர்.
அவரது பேட்டிங் அணுகுமுறை தெளிவானது.
அவர் நம்பிக்கையான மனநிலையில் விளையாடுகிறார்.
பிரித்வி ஷா, சுப்மான் கில் ஆகிய இருவரும் புதிய பந்தை எதிர்கொள்வதில் ஆர்வம் உடையவர்கள்.
சவாலை அனுபவிக்க விரும்புபவர்கள். இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார்.