TAMIL
நியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: இந்திய அணி இன்று அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணி வருகிற 24-ந்தேதி முதல் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து 20 ஓவர் போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்டுகளில் விளையாடுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது.
வழக்கமான 15 வீரர்கள் பட்டியலுக்கு பதிலாக 16 அல்லது 17 வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
20 ஓவர் அணியை பொறுத்தவரை உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் முன்னுரிமை அளிக்கப்படும்.
முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்து கடந்த 4 மாதங்களாக எந்த சர்வதேச போட்டியிலும் ஆடாத ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா நியூசிலாந்து தொடரின் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஏற்கனவே இந்திய ஏ அணிக்கு தேர்வாகி இருந்த ஹர்திக் பாண்ட்யாவுக்கு அதையொட்டி உடல்தகுதி சோதனை நேற்று நடந்தது.
இதில் அவர் முழு உடல்தகுதியுடன் இல்லை என்று தெரிய வந்ததால் இந்திய ஏ அணியில் இருந்து விலக்கப்பட்டார்.
எனவே அவரது வருகை தாமதமாகிறது. ஜூலை மாதத்திற்கு பிறகு எந்த சர்வதேச போட்டியிலும் ஆடாமல் ஒதுங்கி இருக்கும் டோனி இந்த தொடரிலும் சேர்க்கப்பட வாய்ப்பில்லை.
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பார்மில் இல்லாத 34 வயதான ஆல்-ரவுண்டர் கேதர் ஜாதவ் கழற்றி விடப்படலாம்.
அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அல்லது ரஹானே ஆகியோரின் பெயர் ஒரு நாள் போட்டி அணிக்கு பரிசீலிக்கப்படலாம்.
டெஸ்ட் அணியை பொறுத்தவரை 3-வது தொடக்க ஆட்டக்காரர் இடம் மட்டுமே காலியாக உள்ளது.
பிரித்வி ஷா காயத்தால் அவதிப்படுவதால் லோகேஷ் ராகுல், சுப்மான் கில் ஆகியோரில் ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கும்.
5-வது வேகப்பந்து வீச்சாளர் நப்தீப் சைனிக்கு பதில் 3-வது சுழற்பந்து வீச்சாளர் தேவை என்று தேர்வாளர்கள் கருதினால், குல்தீப் யாதவ் இடம் பிடிப்பார்.
மற்றபடி வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா உள்ளிட்டோர் வழக்கம் போல் இடம் பெறுவார்கள்.