CRICKETLATEST UPDATESNEWSTAMIL
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் – நான்காம் நாள் முடிவில் பாகிஸ்தான் 71/3
நியூசிலாந்து -பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மங்கானுவில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 431 ரன் குவித்தது. கேப்டன் வில்லியம்சன் 129 ரன்னும், வாட்லிங் 73 ரன்னும், முன்னாள் கேப்டன் டெய்லர் 70 ரன்னும் எடுத்தனர். ஷகின் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், யாசிர் ஷா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 239 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் பாலோ ஆன் தவிர்க்கப்பட்டது. கேப்டன் ரிஸ்வான் 72 ரன்கள் எடுத்திருந்தார். சிறப்பாக ஆடிய பகீம் அஸ்ரப் 91 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 3 விக்கெட்டும் சவுத்தி, போல்ட், வக்னர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் லாதம் மற்றும் பிளெண்டல் ஆகியோர் அரை சதமடித்தனர். 45.3 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து அணி டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, 373 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். அந்த அணி 37 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அடுத்து இறங்கிய அசார் அலி ஃபவாத் ஆலம் ஆகியோர் நிதானமாக ஆடி மேலும் விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர்.
இறுதியில் நான்காம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்துள்ளது. அசார் அலி 34 ரன்னுடனும், ஆலம் 21 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இன்னும் ஒருநாள் மீதமிருக்கும் நிலையில் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.