TAMIL
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்திய அணி 165 ரன்களில் “ஆல் அவுட்”
இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வாலும், பிரித்வி ஷாவும் களம் இறங்கினர்.
நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் பவுன்சுடன் கூடிய தாக்குதலை தொடுத்து இந்திய பேட்ஸ்மேன்களை திணறடித்தனர்.
டிம் சவுதியின் பவுலிங்கில் பிரித்வி ஷா (16 ரன்) கிளன் போல்டு ஆனார்.
அடுத்து வந்த புஜாரா தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினாலும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை.
அடுத்துகளமிறங்கிய புஜாரா (11 ரன், 42 பந்து) விக்கெட் கீப்பர் வாட்லிங்கிடம் கேட்ச் ஆனார். 3-வது விக்கெட்டுக்கு நுழைந்த கேப்டன் விராட் கோலியும் 2 ரன்னில்( 7 பந்து) வெளியேறினார்.
இதன் பின்னர் துணை கேப்டன் அஜிங்யா ரஹானேவுடன், மயங்க் அகர்வால் ஜோடி 88 ரன்களை எட்டிய போது, அகர்வால் 34 ரன்களில் (84 பந்து, 5 பவுண்டரி) ஷாட் பிட்ச் பந்தை அடித்த போது கேட்ச் ஆகிப்போனார்.
ஹனுமா விஹாரியும் (7 ரன்) சோபிக்கவில்லை. இந்திய அணி தேனீர் இடைவேளையின் போது முதல் இன்னிங்சில் 55 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்திருந்தது.
அப்போது ரஹானே 38 ரன்களுடனும் (122 பந்து, 4 பவுண்டரி), ரிஷாப் பண்ட் 10 ரன்னுடனும் (37 பந்து) களத்தில் இருந்தனர்.
அதன் பிறகு மழை கொட்டியதால் அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவதுநாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் ரிஷாப் பண்ட் 19(53 பந்துகள்) ரன்களும், அடுத்து களமிறங்கிய ஆர். அஸ்வின் (0) ரன் ஏதும் எடுக்காமலும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹானே 46 (138 பந்துகள்) ரன்களும், இஷாந்த் சர்மா 5(23) ரன்களும், முகமது சமி 21(20) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
முடிவில் இந்திய அணி 68.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் டிம் சவுதி, கைல் ஜாமிசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், டிரண்ட் போல்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் நியூசிலாந்து அணியின் சார்பில் டாம் லாதம், டாம் புளுண்டேல் ஆகியோர் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.