TAMIL

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா? – முதலாவது ஆட்டம் இன்று நடக்கிறது

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது.



இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது.

20 ஓவர் போட்டி தொடரில் இந்திய அணியினர் ஆதிக்கம் செலுத்தியது போல் ஒருநாள் போட்டி தொடரிலும் இந்திய அணியின் ஆதிக்கம் தொடருமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் அரைஇறுதியில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறிய இந்திய அணி அதன் பிறகு விளையாடும் 4-வது ஒருநாள் போட்டி தொடர் இதுவாகும்.

கடந்த ஆண்டு வெஸ்ட்இண்டீசில் நடந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கிலும், அதனை அடுத்து சொந்த மண்ணில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.



உலக கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் சூப்பர் ஓவர் முடிவிலும் ‘டை’ ஆனதால் பவுண்டரி எண்ணிக்கை அடிப்படையில் கோப்பையை இழந்த பிறகு நியூசிலாந்து அணி களம் காணும் முதல் ஒருநாள் போட்டி இதுவாகும்.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் தசைப்பிடிப்பால் காயம் அடைந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.

அவர் விளையாடாதது இந்திய அணிக்கு இழப்பாகும்.

அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் அணியில் சேர்க்கப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானும் ஏற்கனவே ஏற்பட்ட காயத்தால் இந்த தொடரில் இடம் பெறவில்லை.

ஒருநாள் போட்டியில் அறிமுக வீரர்களாக களம் இறங்க போகும் பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்குவார்கள் என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்துள்ளார்.

லோகேஷ் ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை கவனிப்பதுடன் 5-வது வரிசையில் விளையாடுவார் என்றும் தெரிவித்து இருக்கிறார்.

20 ஓவர் போட்டி தொடரில் இந்திய அணியினர் தோல்வியின் விளிம்பில் இருக்கையிலும் துவண்டு போகாமல் மன உறுதியுடன் போராடி ஆட்டத்தின் போக்கை மாற்றி வெற்றியை தன்வசப்படுத்தினார்கள்.



அதுபோல் இந்த போட்டி தொடரிலும் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் நிச்சயம் நியூசிலாந்து அணி மீண்டும் தடுமாற்றத்தை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

தோள்பட்டை காயம் காரணமாக கடைசி இரண்டு 20 ஓவர் போட்டியில் விளையாடாத நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதல் 2 ஒருநாள் போட்டியிலும் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக மார்க் சாப்மன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டாம் லாதம் அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு ஆல்-ரவுண்டர் ஜிம்மி நீஷம் திரும்பி இருப்பதும், உயரமான வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் புதுமுக வீரராக சேர்க்கப்பட்டு இருப்பதும் வலுசேர்க்கும்.

நியூசிலாந்துக்கு எதிராக கடைசியாக நடந்த 3 ஒருநாள் (2016, 2017, 2019) போட்டி தொடரிலும் இந்திய அணி வெற்றி வாகை சூடி இருக்கிறது.

அந்த நம்பிக்கையுடன் களம் காணும் இந்திய அணி ஜொலிக்க நல்ல வாய்ப்பு உள்ளது.

இதுவரை இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே 14 ஒருநாள் போட்டி தொடர்கள் அரங்கேறி இருக்கின்றன.

இதில் இந்திய அணி 8 முறையும், நியூசிலாந்து அணி 4 முறையும் தொடரை வென்று இருக்கின்றன.

2 தொடர் சமநிலையில் முடிந்தது.



இந்திய அணி தற்போது 9-வது முறையாக நியூசிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இருக்கிறது.

அந்த நாட்டில் இந்திய அணி 2 முறை ஒருநாள் தொடரை வென்றுள்ளது.

2009-ம் ஆண்டு டோனி தலைமையில் முதல் முறையாக 3-1 (5 ஆட்டம்) என்ற கணக்கில் தொடரை வென்றது.

கடந்த ஆண்டு (2019) விராட்கோலி தலைமையில் 4-1 (5 ஆட்டம்) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 4 முறை தொடரை இழந்துள்ளது. 2 தொடர் சமநிலையில் முடிந்தது.

இவ்விரு அணிகளும் இன்று மோதுவது 108-வது ஒருநாள் போட்டியாகும்.

இதுவரை நடந்த 107 ஆட்டங்களில் இந்திய அணி 55 ஆட்டத்திலும், நியூசிலாந்து அணி 46 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

ஒரு போட்டி டையில் முடிந்தது. 5 ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-



இந்தியா: மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, விராட்கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவ், முகமது ஷமி அல்லது நவ்தீப் சைனி, ஜஸ்பிரித் பும்ரா.

நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், மார்க் சாப்மன், ராஸ் டெய்லர், டாம் லாதம் (கேப்டன்), காலின் டி கிரான்ட்ஹோம், ஜிம்மி நீஷம், மிட்செல் சான்ட்னெர் அல்லது சோதி, கைல் ஜாமிசன் அல்லது டிம் சவுதி, ஹாமிஷ் பென்னட், ஸ்காட் குஜ்ஜெலின்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker