TAMIL
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி ; சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான 4-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
பதிவு: ஜனவரி 31, 2020 16:41 PM
வெலிங்டன்,
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இந்தியா தொடரை கைப்பற்றி விட்டது.
அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் உள்ள வெஸ்ட்பேக் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 50 ரன்களும் (ஆட்டமிழக்காமல்) லோகேஷ் ராகுல் 39 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக இஷ் சோதி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 165 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.
இதையடுத்து வெற்றியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 13 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த இந்திய அணி அசத்தல் வெற்றியை பெற்றது.