TAMIL
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்: ஜோரூட் இரட்டை சதத்தால் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது
இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 375 ரன்னில் ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் டாம் லாதம் 105 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து அணி தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டும், சாம் குர்ரன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3-வது நாளில் 99.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்து இருந்த போது மழை பெய்ததால் அன்றைய ஆட்டம் அத்துடன் முடிவுக்கு வந்தது. 17-வது சதம் அடித்த கேப்டன் ஜோரூட் 114 ரன்னுடனும், ஆலிவர் போப் 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. ஜோரூட், ஆலிவர் போப் தொடர்ந்து ஆடினார்கள். இருவரும் நிதானமாகவும், அதேநேரத்தில் நேர்த்தியாகவும் விளையாடினார்கள். இருவருடைய சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. நங்கூரம் பாய்த்தது போல் நிலைத்து நின்று ஆடிய ஜோரூட் 412 பந்துகளில் 22 பவுண்டரியுடன் இரட்டை சதத்தை எட்டினார். ஜோரூட் அடித்த 3-வது இரட்டை சதம் இதுவாகும்.
அணியின் ஸ்கோர் 455 ரன்னாக உயர்ந்த போது ஆலிவர் போப் (75 ரன்கள், 202 பந்துகளில் 6 பவுண்டரியுடன்) நீல் வாக்னெர் பந்து வீச்சில் ஜீத் ராவலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 6-வது விக்கெட்டுக்கு ஜோரூட், ஆலிவர் போப் ஜோடி 193 ரன்கள் திரட்டியது. அடுத்த ஓவரிலேயே ஜோரூட் (226 ரன்கள், 441 பந்துகளில் 22 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) மிட்செல் சான்ட்னெர் பந்து வீச்சில் ஹென்றி நிகோல்சிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து களம் கண்ட கிறிஸ் வோக்ஸ் (0), ஜோப்ரா ஆர்ச்சர் (8 ரன்), ஸ்டூவர்ட் பிராட் (0) விரைவில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள்.
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 162.5 ஓவர்களில் 476 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. சாம் குர்ரன் 11 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணி தரப்பில் நீல் வாக்னெர் 5 விக்கெட்டும், டிம் சவுதி 2 விக்கெட்டும், மேட் ஹென்றி, மிட்செல் சான்ட்னெர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
இதைத்தொடர்ந்து 101 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 34 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜீத் ராவல் ரன் எதுவும் எடுக்காமலும், டாம் லாதம் 18 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். கேப்டன் கேன் வில்லியம்சன் 37 ரன்னுடனும், ராஸ் டெய்லர் 31 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் சாம் குர்ரன், கிறிஸ் வோக்ஸ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இன்று (செவ்வாய்க்கிழமை) 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. நியூசிலாந்து அணி இன்னும் 5 ரன்கள் பின்தங்கி உள்ளது. அந்த அணி கைவசம் 8 விக்கெட்டுகள் எஞ்சி இருக்கிறது.