CRICKETLATEST UPDATESNEWSTAMIL
நாளை 2-வது 20 ஓவர் போட்டி – இந்தியா தொடரை வெல்லுமா?
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சிட்னியில் நடந்த முதல் போட்டியில் 66 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 51 ரன் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. கான்பெராவில் நடந்த 3-வது போட்டியில் இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் கான்பெராவில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி சிட்னியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஒருநாள் தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்க 20 ஓவர் தொடரை வெல்வது அவசியமாகும்.
இந்திய அணி கடைசியாக ஆடிய 10 இருபது ஓவர் போட்டிளில் 9-ல் வெற்றி பெற்றது. ஒரே ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
காயம் அடைந்த ஆல் ரவுண்டர் ஜடேஜா எஞ்சிய 2 ஆட்டத்திலும் ஆட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் 20 ஓவர் அணிக்கு தேர்வாகியுள்ளார்.
ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பாதிப்பே. நேற்றைய போட்டியில் அவரது அதிரடியான ஆட்டம் வெற்றிக்கு காரணமாக இருந்தது. நாளைய போட்டிக்கான அணியில் மாற்றங்கள் செய்யப்படும். மனிஷ் பாண்டே, முகமது சமி ஆகியோர் கழற்றி விடப்படலாம். ஸ்ரேயாஸ் அய்யர், யசுவேந்திர சாகல், பும்ரா ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும்.
மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்ட சாகல் நேற்று 3 விக்கெட் வீழ்த்தினார். இதனால் அவர் நாளை இடம்பெறுவது உறுதி.
ஆஸ்திரேலிய அணி நேற்றைய போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யும் ஆர்வத்தில் உள்ளது. நாளைய ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது.
ஏனென்றால் தோற்றால் தொடரை இழந்துவிடும். இதனால் அந்த அணி வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள். சிட்னி மைதானம் அந்த அணிக்கு சாதகமானது.
நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 1.40 மணிக்கு தொடங்குகிறது. சோனி டெலிவிஷன் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.