தற்போது இருவரின் பந்து வீச்சு மிகச்சிறப்பான வகையில் இல்லை. குறிப்பாக சாஹல் பந்து வீச்சு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடரின்போது எடுபடவில்லை.
தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த நிலையில் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோரைவிட அஷ்வின், ஜடேஜா சிறந்த ஆப்சனாக இருக்கும் என இங்கிலாந்து முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மோன்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பனேசர் கூறுகையில் ‘‘ஐபிஎல் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருக்கு மிகப்பெரிய விசப்பரீட்சை. இது அவர்களுக்கு மோசமான சீசனாக இருந்தால், டி20 உலகக்கோப்பைக்கான இடம் கேள்விக்குறியதாகிவிடும்.
டி20 உலகக்கோப்பை அக்டோபர் மாதம் வரவிருக்கிறது. விராட் கோலி சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய விரும்புவார். அது யார் என்பது விசயமல்ல. சிறப்பாக விளையாட வேண்டும் என்பதைத்தான் விராட் கோலி விரும்புவார். பேட்ஸ்மேன், ஆல்-ரவுண்டர், வேகப்பந்து வீச்சாளர்கள் குறித்து அவருக்கு கவலை இல்லை. சுழற்பந்து வீச்சுதான் அவருக்கு கவலை அளிப்பதாக இருக்கும்.
ஜடேஜா, அஷ்வின் ஆகியோர் மீண்டும் களம் இறங்குவதை நான் பொருட்படுத்தமாட்டேன். நான் விராட் கோலியாக இருந்தால், டி20 உலகக்கோப்பைக்கான அணியில் குல்தீப் யாவ், சாஹல் ஆகியோருக்குப் பதிலாக அஷ்வின்- ஜடேஜாவை தேர்வு செய்வேன்.
ஏனென்றால் இருவரிடமும் அனுபவம் மற்றும் போட்டியை மாற்றும் திறன் உள்ளது. அதேபோல் இருவரும் ஆல்-ரவுண்டர் திறமை பெற்றவர்கள். அப்படி இருக்கும்போது அவர்கள் இருவரையும் ஏன் தேர்வு செய்யக்கூடாது?’’ என்றார்.