இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் புஜாரா. இவருக்கு ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைப்பதில்லை. இதனால் ஐபிஎல் அணிகளும் இவரை ஏலம் எடுப்பதில்லை. கடந்தத ஏழு வருடத்திற்குப் பிறகு முதன்முறையாக 2021 சீசனுக்கான ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தது.
சென்னை அணிக்காக வி்ளையாட இருக்கும் புஜாரா, நான் பவர் ஹிட்டர் கிடையாது. ஆனால் ஸ்டிரைட் ரேட்டை அதிகரிக்க விராட் கோலி, ரோகித் சர்மாவிடம் இருந்து கற்றுக்கொள்ள முயற்சி செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புஜாரா கூறுகையில் ‘‘ஸ்டிரைக் ரேட் என்று வரும்போது நான் பவர் ஹிட்டர் கிடையாது என்பதை ஒத்துக்கொள்கிறேன். அதேநேரம் விராட் கோலி, ரோகித் சர்மாவிடம் இருந்து கற்றுக்கொள்ள முடியும். இருவரும் முழுமையான பவர் ஹிட்டர்கள் கிடையாது. ஆனால், குறுகிய வடிவிலான போட்டியில் பந்தை சரியான கணித்து விரட்டுவதில் சிறந்தவர்.
கேன் வில்லியம்சன் போன்ற வீரர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். ஸ்டீவ் ஸ்மித்திடம் கூட கற்றுக்கொள்ளலாம். இவர்கள் அனைவரும் கிரிக்கெட் ஷாட்டுகள் மூலம் ரன்கள் அடிக்கிறார்கள்.
நான் வெற்றி பெற வேண்டுமென்றால், அதனுடன் கொஞ்சம் புதுமையும் தேவை. ஆனால், கிரிக்கெட் ஷாட்டுகள் மூலமும் ரன்கள் அடிக்க முடியும். பவரை உருவாக்குவதில் சிறந்து விளங்க வேண்டும். இதை மறுப்பதற்கில்லை. ஆனால் இறுதியில் கிரிக்கெட் உணர்வுகள்தான் முக்கிய பலமாக இருக்கும் என நினைக்கிறேன்’’ என்றார்.