TAMIL
நல்ல உடல் தகுதியுடன் இருந்தால் டோனி தொடர்ந்து விளையாட வேண்டும் – கவுதம் கம்பீர் கருத்து
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வயது என்பது வெறும் நம்பர் தான். நீங்கள் நல்ல பார்முடன் இருந்தாலோ, உண்மையிலே பந்தை நன்றாக அடித்து ஆடினாலோ தொடர்ந்து விளையாடலாம்.
இதே போல் டோனி பந்தை நன்கு அடித்து ஆடினாலோ, சிறப்பான பார்மில் இருந்தாலோ, ஆட்டத்தை அனுபவித்து ஆடினாலோ மற்றும் தன்னுடைய பேட்டிங் வரிசையில் களமிறங்கி இன்னும் தன்னால் இந்திய அணிக்கு வெற்றி தேடிக்கொடுக்க முடியும் என்று நினைத்தாலோ அவர் தொடந்து இந்திய அணிக்காக விளையாடலாம்.
வலுவான உடல் தகுதியுடனும், நல்ல ஆட்டத்திறனுடனும் இருந்தால் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும். ஏனெனில் யாரும், யாரையும் ஓய்வு பெறச் சொல்லி கட்டாயப்படுத்த முடியாது.
வயதை காரணம் காட்டி டோனி போன்றவர்களுக்கு பல நிபுணர்கள் நிறைய நெருக்கடி அளிக்கலாம். ஆனாலும் ஓய்வு என்பது தனிப்பட்டவர்களின் முடிவாகும்.
கிரிக்கெட்டை எப்போது விளையாட தொடங்குகிறீர்கள் என்பதும், அதில் இருந்து எப்போது விலகப் போகிறீர்கள் என்பதும் உங்களுடைய தனிப்பட்ட முடிவாகும்.
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி முந்தைய எல்லா போட்டிகளையும் விட பெரியதாகும். ஏனெனில் இந்த போட்டி தேசத்துக்கானது என்று கருதுகிறேன்.
போட்டி எங்கு நடக்கிறது. எந்த அணி வெற்றி பெறப்போகிறது. யார் அதிக ரன்கள் குவிக்கிறார். யார் அதிக விக்கெட்டுகள் வீழ்த்துகிறார் என்பது பெரிய விஷயமல்ல.
ஐக்கிய அரபு அமீரகம் எந்த வடிவிலான போட்டியையும் நடத்துவதற்கு சிறப்பானதொரு இடமாகும். கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் நடக்க உள்ள இந்த ஐ.பி.எல். போட்டி தேசத்தின் மனநிலையை மாற்றப் போகிறது என்பது தான் மிகவும் முக்கியமானதாகும்.
இவ்வாறு கம்பீர் கூறினார்.
39 வயதான டோனி கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவடைந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த விதமான போட்டிகளிலும் விளையாடவில்லை.
ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக களம் இறங்க உள்ள டோனி இதில் அசத்தினால் மட்டுமே இந்திய அணிக்குள் மீண்டும் நுழைவதற்கு வாய்ப்பு உருவாகும்.
இந்த முறை ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருப்பதால் அடுத்த மாதம் 2-வது வாரத்திலேயே டோனி தலைமையிலான சென்னை அணி அங்கு சென்று பயிற்சியை தொடங்க திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.