TAMIL
நடுவரின் முடிவை அவமதித்த பஞ்சாப் அணி வீரர் சுப்மான் கில்லுக்கு அபராதம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப்-டெல்லி அணிகள் இடையிலான லீக் ஆட்டம் மொகாலியில் கடந்த வாரம் நடந்தது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பஞ்சாப் அணி வீரர் சுப்மான் கில் அடித்த பந்தை விக்கெட் கீப்பர் கேட்ச் செய்ததால் நடுவர் முகமது ரபி, சுப்மான் கில் ‘அவுட்’ என்று அறிவித்தார்.
ஆனால் பந்து பேட்டில் படவில்லை என்று நடுவருடன் வாக்குவாதம் செய்த சுப்மால் கில் களத்தை விட்டு வெளியேற மறுத்தார்.
இதனை அடுத்து லெக் அம்பயருடன் ஆலோசனை நடத்திய நடுவர் தனது முடிவை மாற்றி சுப்மான் கில் அவுட் இல்லை என்று அறிவித்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த டெல்லி அணியினர் வெளிநடப்பு செய்ய முயற்சித்தனர். 10 நிமிடங்கள் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
இந்திய அணிக்காக விளையாடியவரான சுப்மான் கில் நடுவரின் முடிவை அவமதித்தது விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர் ரங்கநாதன், சுப்மான் கில்லுக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதத்தை அபராதமாக விதித்தார்.
அத்துடன் போட்டியின் உத்வேகத்தை குலைக்கும் வகையில் நடந்து கொண்ட டெல்லி அணி வீரர் துருவ் ஷோரேய்க்கு போட்டி கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.