சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தடுமாறி வருகிறது. 4 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி ஒரு வெற்றி, 3 தோல்விகள் என தத்தளித்து வருகிறது.
சென்னை அணியில் துவக்க வீரர்கள் தொடர்ந்து சொதப்புவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. டு பிளஸிஸ் மட்டுமே சென்னை ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறார்.
ஏனைய பேட்ஸ்மேன்கள் விரைவாக ரன்களை சேகரிக்க தடுமாறுகின்றனர்.
நேற்று ஐதாராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்தது.
இதன்பிறகு வரணணையாளர்களிடம் உரையாடிய டோனி கூறியதாவது: என்னால் நிறைய பந்துகளை சரியாக மிடில் செய்ய முடியவில்லை.
எப்படியாயினும் பந்தை அடித்து நொறுக்க வேண்டும் என்ற முடிவினால் இப்படி ஆகியிருக்கலாம்.
நாங்கள் நிறைய விஷயங்களை சரி செய்ய வேண்டியுள்ளது. கேட்ச்களை எடுக்க வேண்டும், நோ-பால்கள் வீசக்கூடாது. இவையெல்லாம் நம்மால் கட்டுப்படுத்த முடியக்கூடியவைதான்.
பேட்ஸ்மென்களின் பலம் என்னவென்பதை உணர்ந்து வீச வேண்டும், 16-வது ஓவருக்குப் பிறகு செய்த தவறையே செய்தோம். ஒட்டுமொத்தமாக இன்னும் ஆட்டத்திறன் மேம்பட வேண்டும்.
யாரும் வேண்டுமென்றே கேட்சை விட மாட்டார்கள். ஆனால் இந்த மட்டத்தில் ஆடும்போது, கேட்ச்களை எடுத்தே தீர வேண்டும் என்று நமக்கு நாமே கூறிக்கொள்ள வேண்டும். குறிப்பாக அணி சரியாக ஆடாத போது கேட்ச்கள் தான் நமக்கு வழிகாட்டும்.
இப்படி கேட்ச்களை நாக் அவுட் கட்டத்தில் விட்டால் என்ன ஆகும்? நாக் அவுட் கட்டத்தில் கேட்ச்களை விட மாட்டோம் என்று கூற முடியாது. எனவே நாம் தொழில்பூர்வமாக சிறப்பான பங்களிப்பை இந்த விஷயத்தில் செய்ய வேண்டும்.இந்தப்போட்டியில் பல சாதகமான விஷயங்கள் நடந்தன. எனவே, அடுத்த போட்டியில் வலுவாக திரும்புவோம்” என்றார்.