சென்னையின் அழுக்குப் பிட்சிகளிலிருந்து விடுதலை பெற்றதை நேற்று கோலி தலைமை ஆர்சிபி அறிவுறுத்தியது, குறிப்பாக படிக்கல் மும்பை பிட்சை பிரமாதமாக எஞ்ஜாய் செய்து ஆடி 51 பந்துகளில் 101 ரன்கள் விளாசி தன் நிலையை ஒரு அபாயகர சத வீரர் என்று உயர்த்திக் கொண்டுள்ளார்.
ஒரு சவாலான பந்து வீச்சுக்கு எதிராக படிக்கல் இந்தச் சதத்தை எடுத்திருந்தால் அவருக்கே திருப்தி இருக்கும், ஆனால் ராஜஸ்தான் பவுலிங் மொத்தமாக போட்டுக்கொடுப்பு பவுலிங்காகவே இருந்ததாலும் களவியூகத்துக்கு ஏற்ப வீசாமல் சவுகரியமாக வீசியதாலும் படிக்கல் சதம் எடுக்க முடிந்தது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருதுராஜ் கெய்க்வாட் அளவுக்கு படிக்கல் திறமை வாய்ந்த பேட்ஸ்மென் கிடையாது.
முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூருவில் அபாரமான பவுலிங்கில் பட்லர், வோரா, சஞ்சு சாம்சன், டேவிட் மில்லர் ஆகியோர் விக்கெட்டுகளை இழந்து 43/4 என்று சரிவு கண்டது. முகமது சிராஜ் அபாரமாக வீசினார், ஜோஸ் பட்லர் பைல்களை தெறிக்கவிட்ட அவர் டேவிட் மில்லருக்கு சற்றும் எதிர்பாராமல் ஒரு யார்க்கரை வீசி எல்.பி.செய்தார்.
பிறகு ஷிவம் துபே (46), ரியான் பராக் (25), ராகுல் திவேத்தியா (23 பந்து 40 ரன்) ராஜஸ்தான் ஸ்கோரை 177/9 என்று ஓரளவுக்கு நல்ல ஸ்கோருக்குக் கொண்டு சென்றனர். ஹர்ஷல் படேல், சிராஜ் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த முறை சஹலுக்கு சாத்துப்படி நடந்தது, ஷிவம் துபே அவரை விரட்டியடித்தார்.
178 ரன்கள் இலக்கை மும்பையின் அபார பேட்டிங் ட்ராக் உதவியுடனும், ராஜஸ்தானின் போட்டுக்கொடுப்பு பவுலிங்கினாலும் கோலியும், படிக்கல்லும் இணைந்து பின்னி எடுத்து 181/0 என்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி தொடக்க வீரர்கள்தான் படுமோசமாக ஆடிவந்தனர். சராசரி 14.25 தான். அதனால் ஆடியே ஆக வேண்டும் என்ற நெருக்கடி படிக்கல், கோலிக்கு இருந்தது.
ஆனால் ராஜஸ்தான் பவுலிங் இதற்கு உதவியது. குறிப்பாக படிக்கல்லுக்கு லிட்ரலாக போட்டுக் கொடுத்தனர் ராஜஸ்தான் ராயல்ஸ் பந்து வீச்சாளர்கள். முதலில் சக்காரியா லெக்சைடில் போட்டுக் கொடுத்தார். பிறகு ஷ்ரேயஸ் கோபால் லெக் திசையில் ஓவர் பிட்சாகப் போட்டு ஸ்வீப் ஷாட்டுக்கு உதவினார். கிறிஸ் மோரிஸ் லெக் திசையில் பேக் செய்து விட்டு ஆஃப் திசையில் ஷார்ட் அண்ட் வைடாக வீச படிக்கல் சுலபமாக பவுண்டரி அடித்தார். அந்த களவியூகத்துக்கான பந்து அல்ல அது. கோலிக்கும் லெக் திசையில் ஃபுல் பந்தை வீசினார் மோரிஸ், பவுண்டரி பறந்தது. முஸ்தபிசுர் ரஹ்மான் வேகமும் இல்லாமல் ஒன்றுமில்லாமல் லெந்தில் கொண்டு வந்து போட்டார், சிக்சருக்கு அனுப்பினார் படிக்கல்.
சக்காரியாவும் இந்தா வச்சுக்கோ என்று ஒரு ஓவர் பிட்ச் பந்தை வீச அதனையும் முறையாக சிக்சருக்கு அனுப்பினார் படிக்கல். திவேத்தியா வந்தார் வந்தவுடனேயே ஷார்ட் அண்ட் வைடு பந்தை வீசினார் படிக்கல் பவுண்டரிக்கு அனுப்பினார். பராக் நட்பு ரீதியான ஒரு பந்தை ஆஃப்வாலியாக வீச படிக்கல் எக்ஸ்ட்ரா கவரில் பவுண்டரி அடித்து 27 பந்துகளில் அரைசதம் கண்டார். பராகை நேராக அடித்த சிக்ஸ் மட்டுமே படிக்கல் தன் முயற்சியில் அடித்த சிக்ஸ். பாக்கி எல்லாம் போட்டுக்கொடுத்த பந்துகள்தான். திவேத்தியாவும் லெந்த்தில் லெந்தில் வீசி படிக்கலுக்கு சுலபமாக்கினார். இப்படி 2 பந்துகளை லெந்தில் சுலபமாக ஸ்லாட்டில் வீசியதால் இரண்டு சிக்சர்களை அடுத்தடுத்து விளாசினார் படிக்கல்.
முஸ்தபிசுர் அவரது வேகத்துக்கு ஷார்ட் பிட்ச் எல்லாம் போடக்கூடாது, அப்படிப் போட்டார், புல்ஷாட்டில் படிக்கல் சிக்ஸ் விளாசினார். 27 பந்துகளில் அரைசதம் கண்ட படிக்கல் அடுத்த 9 பந்துகளில் 30 ரன்கள் விளாசி 36 பந்தில் 80 ரன்கள் என்று விறுவிறுப்பு காட்டினார், காரணம் சொத்தைப் பந்து வீச்சு.
கிறிஸ் மோரிஸ் வீசிய லெந்த் ஸ்லோ பந்தில் சிக்ஸ், பிறகு புல்டாஸ் பந்தில் பவுண்டரி அடித்து கோலி 6,000 ரன்களை ஐபிஎல் தொடரில் எடுத்து சாதனை புரிந்தார். ஷ்ரேயஸ் கோபால் ஷார்ட் பிட்சாக வீசித்தள்ளினார். பவுலிங்கில் ஒன்றுமில்லை என்று தெரிந்தவுடன் படிக்கல் ரிவர்ஸ் ஷாட்டெல்லாம் ஆடத் தொடங்கிவிட்டார். முஸ்தபிசுரின் லெந்த் பந்தில்தான் படிக்கல் பவுண்டரி அடித்து 51 பந்துகளில் சதம் கண்டார். போதாக்குறைக்கு முஸ்தபிசுர் லெக் திசையில் பெரிய வைடு வீசி 5 வைடு ரன்கள் வந்தன. இதுதான் வெற்றி ஷாட்.
தொடக்கம் முதல் கடைசி பந்து வரை சளைக்காமல் ராஜஸ்தான் பவுலர்கள் போட்டுக் கொடுத்தனர் என்பதே நேற்று மேட்சைப் பார்த்தவர்கள் உணர்வது. அதற்காக படிக்கல்லின் இன்னிங்ஸை குறை கூற முடியாது, எளிதான போட்டுக்கொடுப்பு பந்து வீச்சைப் பயன்படுத்தி சதம் எடுத்தது அவர் தவறில்லையே? ஆனால் இந்த இன்னிங்ஸை வைத்து, இந்த சொத்தைப் பவுலிங்கில் எடுத்த சதத்தை வைத்து அவரை ‘ஆச்சா போச்சா’ பேட்ஸ்மென் என்றெல்லாம் அவசரப்பட்டு தூக்கிப் பிடித்தல் கூடாது.