TAMIL

தேசிய கிரிக்கெட் அகாடமியில் தான் உடல்தகுதியை நிரூபிக்க வேண்டும் – பும்ரா விவகாரம் குறித்து கங்குலி கருத்து

இந்திய கிரிக்கெட் அணியின் ‘நம்பர் ஒன்’ வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் கிங்ஸ்டனில்
நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்தார்.

அழுத்தத்தின் காரணமாக முதுகு தண்டுவடத்தில் உள்ள எலும்பில் ஏற்பட்ட லேசான முறிவுக்கு சிகிச்சை பெற்ற பும்ரா அதன் பிறகு எந்த
சர்வதேச போட்டியிலும் பங்கேற்கவில்லை.

காயத்தில் இருந்து ஓரளவு மீண்டு விட்ட 26 வயதான பும்ரா, சில தினங்களுக்கு முன்பு இந்திய அணியினருடன் இணைந்து வலை பயிற்சியில் ஈடுபட்டார்.


ஜனவரி மாதம் இறுதியில் தொடங்கும் நியூசிலாந்து தொடரின் போது அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்பாக சில உள்ளூர் போட்டிகளில் விளையாடவும் திட்டமிட்டுள்ளார்.

பொதுவாக இந்திய வீரர்கள் காயமடைந்து ஓய்வில் இருந்தால் அதன் பிறகு இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என்றால் பெங்களூருவில்
உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று தங்களது உடல்தகுதியை நிரூபிக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்காக அங்கு அவர்களுக்கு பல்வேறு பயிற்சி மற்றும் சோதனைகள் நடத்தப்படுவது உண்டு.


அங்கு வழங்கப்படும் உடல்தகுதி அறிக்கையை பொறுத்தே தேர்வு குழுவினர் அந்த வீரரை மறுபடியும் அணிக்கு தேர்வு செய்வது குறித்து
முடிவு செய்வார்கள்.

இந்த நிலையில் பும்ராவுக்கு, தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல்தகுதி சோதனை நடத்த அதன் தலைவரான முன்னாள் கேப்டன்
ராகுல் டிராவிட் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பும்ரா காயத்தில் இருந்து குணமடைந்து பயிற்சி முறைகளை மேற்கொள்வதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லாமல்
மும்பையில் தனியாக ரஜினிகாந்த் சிவஞானம் என்ற உடல்தகுதி நிபுணரின் மேற்பார்வையில் பயிற்சியில் ஈடுபட்டு அது தொடர்பான
வீடியோக்களை வெளியிட்டார்.

கடைசியில் உடல்தகுதி அறிக்கைக்காக மட்டும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் கதவை தட்டினார்.


இதனால் அதிருப்திக்குள்ளான டிராவிட் தரப்பினர், தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை மற்றும் பயிற்சி பெறாத ஒருவருக்கு
விளையாட உடல்தகுதியுடன் இருக்கிறார் என்று மட்டும் எப்படி அறிக்கை கொடுக்க முடியும்? அவர் யாரிடம் காயத்தில் இருந்து
மீள்வதற்கான நடைமுறைகளை மேற்கொண்டாரோ அவரிடமே உடல்தகுதி அறிக்கையையும் பெற்றுக் கொள்ளட்டும்’ என்று கூறியுள்ளனர்.

இந்த விஷயம் சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில் இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலியிடம் நேற்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு கங்குலி பதில் அளிக்கும் போது, ‘பும்ரா விவகாரம் குறித்து எனக்கு தெரியாது.

ஆனால் தேசிய கிரிக்கெட் அகாடமி தான் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு உடல்தகுதியை நிரூபிக்க முதலும் கடைசியுமான இடமாகும்.

காயத்தில் சிக்கும் சர்வதேச போட்டியில் ஆடும் ஒவ்வொரு இந்திய வீரரும் அங்கு சென்று விட்டு தான் வர வேண்டும்.

இந்திய வீரர்களுக்கு அது முக்கியமான இடம்.


தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் ராகுல் டிராவிட் அர்ப்பணிப்புடன் உழைக்கக்கூடியவர்.

வியப்புக்குரிய ஒரு வீரர்.

அவரிடமும், அகாடமி நிர்வாகிகளிடமும் பேசிய பிறகு உங்களுக்கு (நிருபர்கள்) இந்த பிரச்சினை குறித்து முழு விவரங்களை தெரிவிக்கிறேன்.

இந்த விவகாரம் விரைவில் சரி செய்யப்படும்’ என்றார்.


கங்குலி மேலும் கூறுகையில், ‘கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி ஓரிரு நாட்களில் அமைக்கப்படும்.

ஏற்கனவே தலைமை பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு விட்ட நிலையில், இந்த கமிட்டியினர் ஒரே ஒரு முறை கூடி ஆலோசித்து இந்திய அணிக்கான புதிய தேர்வு குழுவினரை தேர்வு செய்வார்கள்’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker