TAMIL
தெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடருகிறது – ஒரேநாளில் 15 தங்கம் வென்றது
13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு, போக்ஹராவில் நடந்து வருகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 7 நாடுகளை சேர்ந்த 2,700 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் நேற்று நடந்த டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய்-அந்தோணி அமல்ராஜ் ஜோடி 8-11, 11-7, 11-7, 11-5, 8-11, 12-10 என்ற செட் கணக்கில் சக நாட்டு இணையான சனில் ஷெட்டி-சுதன்ஷூ குரோவரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது
இதன் பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிசுற்றில் இந்தியாவின் மதுரிகா பத்கர்-ஸ்ரீஜா அகுலா ஜோடி 2-11, 11-8, 11-8, 11-6, 5-11, 11-5 என்ற செட் கணக்கில் சக நாட்டின் சுதிர்தா முகர்ஜி-அஹிகா முகர்ஜி இணையை சாய்த்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய்-சுதிர்தா முகர்ஜி இணை அந்தோணி அமல்ராஜ்-அஹிகா முகர்ஜி ஜோடியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. மேலும் தோல்வியை தழுவிய மூன்று இந்திய ஜோடிகளுக்கும் வெள்ளிப்பதக்கம் கிட்டியது.
தடகள போட்டியில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை அர்ச்சனா சுசீந்திரன் 23.67 வினாடியில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். அவர் முந்தைய நாளில் நடந்த 100 மீட்டர் ஓட்டத்திலும் மகுடம் சூடி இருந்தார். மற்றொரு இந்திய வீராங்கனை சந்திரலேகா (24.37 வினாடி) வெண்கலப்பதக்கம் பெற்றார்.
10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் சுரேஷ்குமார் (29 நிமிடம் 32 வினாடி) தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். நீளம் தாண்டுதலில் இந்திய வீரர்கள் லோகேஷ் சத்யநாதன் (7.87 மீட்டர்) தங்கப்பதக்கமும், தமிழகத்தை சேர்ந்த சுவாமிநாதன் (7.77 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.
ஆண்களுக்கான வட்டு எறிதலில் இந்திய வீரர்கள் கிர்பால் சிங் (57.88 மீட்டர்) தங்கப்பதக்கமும், ககன்தீப் சிங் (53.57 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும் வென்றனர். பெண்களுக்கான வட்டு எறிதலில் இந்திய வீராங்கனைகள் நவ்ஜீத் கவுர் (49.87 மீட்டர்) தங்கப்பதக்கமும், சுர்வி பிஸ்வாஸ் (47.47 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றினர்.
தேக்வாண்டோ போட்டியில் இந்தியாவை சேர்ந்த லைதிகா பண்டாரி (53 கிலோ), ஜர்னல் சிங் (74 கிலோ), ருதாலி பருவா (73 கிலோ) ஆகியோர் தங்கப்பதக்கமும், சவுரவ் (63 கிலோ), கங்ஜோத் (62 கிலோ) ஆகியோர் வெள்ளிப்பதக்கமும் கபளகரம் செய்தனர்.
கோ-கோ இறுதிப்போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி 16-9 என்ற புள்ளி கணக்கில் வங்காளதேசத்தையும், பெண்கள் பிரிவில் இந்திய அணி 17-5 என்ற புள்ளி கணக்கில் நேபாளத்தையும் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது.
பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் சிரில் வர்மா, ஆர்யமான் தண்டன் ஆகியோரும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் காயத்ரி கோபிசந்த், அஷ்மிதா சாலிஹா ஆகியோரும், பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் குஹோ கார்க்-அனுஷ்கா பரிக், மேகனா ஜக்கம்புடி-நீலகுர்தி ஜோடியும், கலப்பு இரட்டையர் பிரிவில் துருவ் கபிலா-மேகனா ஜக்கம்புடி ஜோடியும், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் கிருஷ்ணா கார்கா-துருவ் கபிலா ஜோடியும் அரைஇறுதிக்கு முன்னேறின. இதன் மூலம் இந்தியா 8 பதக்கங்களை உறுதி செய்துள்ளது.
நேற்று ஒரேநாளில் இந்தியா 15 தங்கம் உள்பட 29 பதக்கங்களை அறுவடை செய்தது. பதக்கப்பட்டியலில் இந்தியா 32 தங்கம், 26 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 71 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. நேபாளம் 29 தங்கம் உள்பட 69 பதக்கத்துடன் 2-வது இடத்தில் இருக்கிறது