TAMIL
தெற்காசிய விளையாட்டில் இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தங்கம் வென்றார்
7 நாடுகள் பங்கேற்றுள்ள 13-வது தெற்காசிய விளையாட்டு போட்டி நேபாளத்தில் உள்ள காத்மண்டு மற்றும் போக்ஹராவில் நடந்து வருகிறது. இதில் நேற்றும் இந்திய வீரர்களின் பதக்கவேட்டை தொடர்ந்தது.
மல்யுத்தத்தில் மேலும் 4 தங்கப்பதக்கம் கிடைத்தது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவரான இந்திய நட்சத்திர வீராங்கனை சாக்ஷி மாலிக் (62 கிலோ பிரிவு) தன்னை எதிர்த்து ஆடிய எல்லா வீராங்கனைகளையும் அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் புரட்டியெடுத்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். இந்திய வீரர் ரவீந்தர் (61 கிலோ) இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானின் பிலாலை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். பவான்குமார் (86 கிலோ), அன்ஷூ (59 கிலோ) ஆகியோரும் தங்கள் பிரிவில் வாகை சூடினர்.
குத்துச்சண்டை போட்டியில் இந்தியர்கள் முழுமையாக கோலோச்சினர். காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ உடல் எடைப்பிரிவு) அரைஇறுதியில் நேபாளத்தின் பிகாஷ் லாமாவை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். ஸ்பார்ஷ் (52 கிலோ), வரிந்தர் (60 கிலோ), நரேந்தர் (91 கிலோவுக்கு மேல்), வீராங்கனைகளில் பிங்கிராணி (51 கிலோ), சோனியா லாதர் (57 கிலோ), மஞ்சு பாம்போரியா (64 கிலோ) ஆகியோரும் இறுதி சுற்றை எட்டினர். முந்தைய நாளையும் சேர்த்து குத்துச்சண்டையில் மட்டும் 15 இந்தியர்கள் இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளனர். இதன் மூலம் குத்துச்சண்டையில் 15 தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது.
நீச்சலில் 7 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலத்தை இந்தியர்கள் அள்ளினர். இதில் ஆண்களுக்கான 400 மீட்டர் பிரீஸ்டைலில் இந்திய வீரர் குஷாக்ரா ரவாத் 3 நிமிடம் 49.76 வினாடிகளில் முதலாவதாக வந்ததும், 200 மீட்டர் பட்டர்பிளை பிரிவில் இந்தியாவின் சுப்ரியா மோன்டல் 2 நிமிடம் 02.45 வினாடிகளில் இலக்கை கடந்ததும் குறிப்பிடத்தக்கது. இதே போல் வாள்வீச்சு போட்டியில் இந்தியாவுக்கு 3 தங்கம் கிடைத்தது. ஹேண்ட்பால் போட்டியில் இந்திய பெண்கள் அணி தங்கம் வென்றது. ஆண்கள் அணி இறுதி ஆட்டத்தில் தோற்று வெள்ளிப்பதக்கம் பெற்றது.
நேற்று ஒரே நாளில் இந்தியா 22 தங்கம் உள்பட 38 பதக்கங்களை கைப்பற்றியது. மொத்தத்தில் இந்தியா 132 தங்கம், 79 வெள்ளி, 41 வெண்கலம் என்று 252 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிட சிம்மாசனத்தில் உள்ளது. நேபாளம் 45 தங்கம் உள்பட 165 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் பளுதூக்குதலில் தங்கப்பதக்கம் வென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த வீராங்கனை அனுராதாவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்