CRICKETLATEST UPDATESNEWSTAMIL
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன்களாக டீன் எல்கர், பவுமா நியமனம்
தென்ஆப்பிரிக்க ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த விக்கெட் கீப்பர் குயின்டாக் டி காக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இதனால் பணிச்சுமை காரணமாக அவருடைய பேட்டிங் திறன் பாதிப்புக்கு உள்ளானது. அவரது தலைமையில் தென்ஆப்பிரிக்க அணி, பாகிஸ்தானில் நடந்த டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. உள்ளூரில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக உள்ளூரில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் 0-3 என்ற கணக்கில் தோல்வி கண்டது.
இந்த நிலையில் தென்ஆப்பிரிக்க ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக டெம்பா பவுமா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இரண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி (2021, 2022) மற்றும் 2023-ம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலக கோப்பை போட்டி வரை அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்க அணிக்கு நிரந்தரமாக நியமிக்கப்பட்ட முதல் கருப்பு ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த கேப்டன் பவுமா என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் அணியின் கேப்டனாக டீன் எல்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் அடுத்து நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வரை அணிக்கு தலைமை தாங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.