TAMIL
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய இயக்குனர் சுமித்தின் பதவி காலம் நீட்டிப்பு
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தற்காலிக இயக்குனராக முன்னாள் கேப்டன் கிரேமி சுமித் கடந்த ஆண்டு (2019) டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வர்ணனையாளராக செயல்பட வசதியாக 3 மாதத்தில் இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகுவேன் என்று சுமித் தெரிவித்து இருந்தார்.
ஆனால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாதம் (மார்ச்) 29-ந் தேதி தொடங்க இருந்த ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி தள்ளி போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனர் பொறுப்பில் சுமித் மேலும் 2 ஆண்டுகள் நீடிப்பார் என்று தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்துள்ளது.
அதாவது 2022-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை அவர் இயக்குனராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி டாக்டர் ஜேக்யூஸ் பால் கருத்து தெரிவிக்கையில், ‘தனது ஆற்றல், அனுபவம், கடின உழைப்பு, ஆர்வம் ஆகியவற்றின் மூலமே கிரேமி சுமித் குறுகிய காலத்தில் தென்ஆப்பிரிக்க அணியில் நல்ல தாக்கத்தை கொண்டு வந்து இருக்கிறார்.
இதனால் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி முன்னேற்ற பாதையில் பயணிக்க தொடங்கி இருக்கிறது.
சர்வதேச மற்றும் உள்ளூர் திறமையை பொறுத்தமட்டில் நாம் சிறந்த நிலையை எட்ட இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது’ என்றார்.
பதவி நீட்டிப்பு குறித்து கிரேமி சுமித் கூறுகையில், ‘தென்ஆப்பிரிக்க கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச்செல்லும் வகையில் என்னை இயக்குனர் பதவியில் நீட்டிக்க செய்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த நியமனத்தின் மூலம் அணிக்கான எதிர்கால திட்டத்தை வகுப்பது எளிதாகி இருக்கிறது.
சர்வதேச அரங்கில் தென்ஆப்பிரிக்காவை தலைச்சிறந்த அணியாக கொண்டு வருவது தான் எனது நோக்கமாகும்’ என்று தெரிவித்தார்.