TAMIL
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டூ பிளஸ்சிஸ் விலகல்
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கான கேப்டனாக இருந்தவர் டூ பிளஸ்சிஸ்.
சமீபத்தில் நடந்து முடிந்த 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய தென்ஆப்பிரிக்க அணியில் டூ பிளஸ்சிசுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த தொடரை 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி வென்றிருந்தது.
இந்நிலையில், தனது கேப்டன் பதவியில் இருந்து டூ பிளஸ்சிஸ் இன்று உடனடியாக விலகியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடங்க ஒரு வாரத்திற்கும் குறைவாக நாட்கள் உள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டு உள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான சமீபத்திய போட்டி தொடரில் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து டூ பிளஸ்சிஸ் விலகினார்.
இதனால் அந்த அணியின் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக், கேப்டனாக அணியை வழிநடத்தி சென்றார்.
இதுபற்றி டூ பிளஸ்சிஸ் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தென்ஆப்பிரிக்க அணி ஒரு புதிய சகாப்தம் தொடங்குவதற்கு உதவியாக இந்த முடிவை எடுத்துள்ளேன் என தெரிவித்து உள்ளார்.
தொடர்ந்து அவர், மீதமுள்ள டெஸ்ட் போட்டிகள் மற்றும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிகள் ஆகியவற்றில் கேப்டனாக இருந்து அணியை வழி நடத்தி செல்ல நான் விரும்பியிருக்கலாம்.
ஆனால், ஒரு தலைவரின் மிக முக்கிய அம்சம் என்பது சுயநலமின்றி இருக்க வேண்டும்.
நான் ஆரோக்கியமுடன், அணியில் விளையாட தகுதியுடன், ஆற்றலுடன் மற்றும் ஊக்கமுடன் உள்ளேன்.
அணிக்காக, தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான செயல்திறனுடன் விளையாடும் வரை அணியில் முக்கிய பங்காற்ற மடியும் என்றே என்னை நான் நிச்சயம் காண்கிறேன் என்றும் அவர் அதில் தெரிவித்து உள்ளார்.