TAMIL

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட்: இந்திய அணியின் ஆதிக்கம் நீடிக்குமா? – 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்

இந்தியாவுக்கு வந்துள்ள பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.



இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

தொடக்க ஆட்டத்தில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் இந்திய வீரர்கள் பட்டையை கிளப்பினர். குறிப்பாக முதல் முறையாக டெஸ்டில் தொடக்க வீரராக இறங்கிய ரோகித் சர்மா இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்ததோடு மொத்தம் 13 சிக்சர் விளாசி உலக சாதனை படைத்தார். மயங்க் அகர்வாலின் இரட்டை சதமும் கவனிக்கத்தக்க அம்சமாக இருந்தன.

பந்து வீச்சை பொறுத்தவரை முதல் இன்னிங்சில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை அள்ளினார். 2-வது இன்னிங்சில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 4 போல்டு உள்பட 5 விக்கெட்டுகளை கபளகரம் செய்தார். அதே உத்வேகத்துடன் இந்திய அணியினர் இந்த டெஸ்டிலும் ஆதிக்கம் செலுத்த ஆயத்தமாகியுள்ளனர். இந்த டெஸ்டிலும் இந்தியா வாகை சூடினால், அது உள்ளூரில் இந்தியா தொடர்ச்சியாக வெல்லும் 11-வது தொடராக அமையும். அவ்வாறு நிகழ்ந்தால் அது புதிய சாதனையாக பதிவாகும். ஆடுகளம் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டிருப்பதால் அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவின் தாக்கம் கணிசமாக இருக்கும்.

கேப்டனாக 50-வது டெஸ் டில் கால்பதிக்கும் இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘முகமது ஷமி பொறுப்பை எடுத்துக் கொண்டு பந்து வீசுகிறார். அதனால் அவருக்கு மேற்கொண்டு அழுத்தம் கொடுக்க வேண்டிய தேவையில்லை. குறிப்பிட்ட பகுதியில் பந்து வீச வேண்டும் என்று சொல்ல வேண்டியதும் இல்லை. சூழ்நிலையை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப அவராகவே பந்து வீச வாய்ப்பு தரும்படி கேட்டு பெறுகிறார். அணியில் சுயநலவாதி யாரும் கிடையாது. அனைவரும் அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தான் சிந்திக்கிறார்கள்.

ரோகித் சர்மா தொடக்க வீரராக இதே போன்று தொடர்ந்து ஆடினால், பெரும்பாலான டெஸ்டுகளில் நமக்கே வெற்றி வாய்ப்பு உருவாகும். அவர் ஆடிய விதம் எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி அளித்தது. சிவப்பு நிற பந்திலும் அவர் அனுபவித்து உற்சாகமாக விளையாட வேண்டிய நேரம் இது. ஊடகத்தினர் அவர் மீது கவனம் செலுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்’ என்றார்.

தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை விசாகப்பட்டினம் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 431 ரன்கள் குவித்தது. குயின்டான் டி காக், டீன் எல்கர் சதம் அடித்து அசத்தினர். ஆனால் 395 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய 2-வது இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 191 ரன்னில் சரண் அடைந்தது. அந்த அணியில் கேஷவ் மகராஜ், செனுரன் முத்துசாமி, டேன் பீட் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தும் தாக்கத்தை ஏற்படுத்த இயலவில்லை. எனவே இவர்களில் ஒருவர் கழற்றி விடப்பட்டு கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் சேர்க்கப்படலாம்.

தமிழகத்தை பூர்விகமாக கொண்ட முத்துசாமி பேட்டிங்கில் இரண்டு இன்னிங்சிலும் 100 பந்துகளுக்கு மேலாக தாக்குப்பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படலாம். முந்தைய டெஸ்டில் செய்த தவறுகளை திருத்திக்கொண்டு பரிகாரம் தேட தென்ஆப்பிரிக்க வீரர்கள் முயற்சிப்பார்கள்.




தென்ஆப்பிரிக்க கேப்டன் பிளிஸ்சிஸ் கூறுகையில், ‘இந்திய மண்ணில் விளையாடும் போது சுழற்பந்து வீச்சு தாக்குதலை சமாளிக்கும் வகையில் ஆட வேண்டும். ஆனால் முழுமையாக தடுப்பாட்ட யுக்தியை கையாண்டால் அது எதிரணியின் கை ஓங்குவதற்கு வாய்ப்பு வழங்குவது போல் ஆகி விடும். இந்திய துணைகண்டத்தில் தடுப்பாட்டம் மற்றும் அதிரடி இரண்டும் கலந்து விளையாட வேண்டியது முக்கியமாகும். சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் உள்ளூரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். எனவே அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லா நேரங்களிலும் அவர்கள் சிறப்பாக பந்து வீசுவார்கள். அதில் ஒரு பந்தில் உங்களது பெயர் (விக்கெட்) இணைந்து விடும்.

முதலாவது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அதிக தீவிரத்துடன் பவுலிங் செய்ததை பார்க்க முடிந்தது. அவர் களத்தில் எந்த கோணத்தில் பந்து வீசுகிறார், எப்படி ரிவர்ஸ் ஸ்விங் செய்கிறார் என்பதை அவரிடம் இருந்து எங்களது பவுலர்கள் கற்றுக் கொள்ள முடியும்.’ என்றார்.

புனே மைதானத்தில் இதுவரை ஒரே ஒரு டெஸ்ட் போட்டி மட்டுமே நடந்துள்ளது. 2017-ம் ஆண்டு நடந்த அந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா 333 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, ஹனுமா விஹாரி, விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா.

தென்ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ராம், டீன் எல்கர், தேனிஸ் டி புருன், டெம்பா பவுமா, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), குயின்டான் டி காக் (விக்கெட் கீப்பர்), செனுரன் முத்துசாமி, வெரோன் பிலாண்டர், காஜிசோ ரபடா, கேஷவ் மகராஜ், டேன் பீட் அல்லது நிகிடி.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

வெளிநாட்டு டெஸ்ட் வெற்றிக்கு கூடுதல் புள்ளி வழங்கியிருக்கலாம் – இந்திய கேப்டன் கோலி கருத்து

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 9 அணிகளின் முடிவுகள் கணக்கிடப்படும். ஒவ்வொரு அணிகளும் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் மொத்தம் 6 டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும். 2021-ம் ஆண்டு மார்ச் வரை நடக்கும் இந்த போட்டியில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

உலக சாம்பியன்ஷிப்பில் ஒவ்வொரு தொடருக்கும் அதிகபட்சமாக 120 புள்ளிகள் வழங்கப்படும். தற்போது நடந்து வரும் இந்தியா- தென்ஆப்பிரிக்கா 3 போட்டிகள் கொண்ட தொடரில் வெற்றிக்கு 40 புள்ளிகளும், டிராவுக்கு 13 புள்ளிகளும் வழங்கப்படுகிறது. உலக சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்தியா 160 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது.

இந்த நிலையில் இது தொடர்பான ஒரு கேள்விக்கு இந்திய கேப்டன் விராட் கோலி பதில் அளிக்கும் போது, ‘உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு வழங்கப்படும் புள்ளிகள் முறை குறித்து என்னிடம் யோசனை கேட்டிருந்தால், வெளிநாட்டு டெஸ்டில் வெற்றி பெறும் அணிக்கு புள்ளியை இரண்டு மடங்காக வழங்க வேண்டும் என்று சொல்லி இருப்பேன். முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு பிறகு இது மாதிரி புள்ளி வழங்கப்படலாம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வந்த பிறகு ஒவ்வொரு டெஸ்ட் போட்டிகளும் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. முன்பு 3 போட்டிகள் கொண்ட தொடரில் டிராவுக்காக விளையாடுவது உண்டு. ஆனால் இப்போது வெற்றிக்கு கூடுதல் புள்ளிகள் கிடைப்பதால் எந்த அணியும் ‘டிரா’வை விரும்புவதில்லை. இது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயமாகும்’ என்றார்.

தென்ஆப்பிரிக்க கேப்டன் பிளிஸ்சிஸ் கூறுகையில் ‘உலக சாம்பியன்ஷிப் போட்டியால் உள்ளூர் அணிகளுக்குரிய ஆடுகளங்கள் தயாரிப்பிலும் மாற்றம் வந்து விட்டது. முன்பு ஆடுகளத்தன்மை மோசமாக இருந்தால் ஐ.சி.சி. சார்பில் எச்சரிக்கை விடுப்பார்கள். இப்போது அந்த நிலை வந்தால் புள்ளிகளை இழக்க நேரிடும். இந்த விதிமுறை சிறந்த ஆடுகளம் உருவாக வழிவகுக்கும்’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker