TAMIL
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி 2 ரன்னில் வெற்றி
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது.
இதன் 2-வது ஆட்டம் டர்பனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் ஆட்டம் இழக்காமல் 47 ரன்னும் (30 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ஜாசன் ராய் 40 ரன்னும் (29 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), மொயீன் அலி 39 ரன்னும் (11 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.
பின்னர் ‘மெகா’ இலக்கை நோக்கி களம் புகுந்த தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் குயின்டான் டி காக் வாணவேடிக்கை காட்டினார்.
17 பந்துகளில் அரைசதத்தை கடந்து இங்கிலாந்து பவுலர்களை மிரள வைத்த அவர் 65 ரன்கள் (22 பந்து, 2 பவுண்டரி, 8 சிக்சர்) விளாசிய நிலையில் ஆட்டம் இழந்தார்.
பவுமா 31 ரன்னிலும், டேவிட் மில்லர் 21 ரன்னிலும், ஸ்மட்ஸ் 13 ரன்னிலும், பெலக்வாயோ ரன் இன்றியும் வெளியேறினர்.
கடைசி ஓவரில் தென்ஆப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது.
கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தது. பரபரப்பான இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் டாம் கர்ரன் வீசினார்.
முதல் பந்தில் ரன் எடுக்காத பிரிட்டோரியஸ் 2-வது பந்தில் சிக்சரும், 3-வது பந்தில் பவுண்டரியும் ஓடவிட்டு உள்ளூர் ரசிகர்களை குதூகலப்படுத்தினார்.
4-வது பந்தில் 2 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து கடைசி 2 பந்தில் 3 ரன் மட்டுமே தேவைப்பட்டது. 5-வது பந்தில் பிரிட்டோரியஸ் (25 ரன்கள்) எல்.பி.டபிள்யூ. ஆனார்.
அப்போது வெளியில் இருந்து கேப்டன் குயின்டான் டி காக் அப்பீல் செய்ய சொல்லியதை தொடர்ந்து நடுவரின் முடிவை எதிர்த்து பிரிட்டோரியஸ் செய்த அப்பீல் தோல்வியில் முடிந்ததுடன், சர்ச்சையையும் கிளப்பியது.
கடைசி பந்தை எதிர்கொண்ட பார்ச்சுன் (0) அடில் ரஷித்திடம் கேட்ச் ஆனார்.
20 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 202 ரன்களே எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை சுவைத்தது.
வான்டெர் துஸ்சென் 26 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 43 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.
இங்கிலாந்து தரப்பில் டாம் கர்ரன், கிறிஸ் ஜோர்டான், மார்க்வுட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது.
முதலாவது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்க அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.
இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடக்கிறது.
இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.