TAMIL
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து 400 ரன்கள் குவிப்பு
இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வருகிறது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து தொடக்க நாளில் 4 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்திருந்தது.
2-வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 400 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.
ஆச்சரியம் அளிக்கும் வகையில் இங்கிலாந்தின் கடைசி நிலை வீரர்கள் பேட்டிங்கில் மிரட்டினர்.
மார்க்வுட்டும் (35 ரன்), ஸ்டூவர்ட் பிராட்டும் (43 ரன்) 10-வது விக்கெட்டுக்கு 82 ரன்கள் திரட்டியது குறிப்பிடத்தக்க அம்சமாகும். முன்னதாக கேப்டன் ஜோ ரூட் (59 ரன்), ஆலிவர் போப் (56 ரன்) அரைசதம் அடித்தனர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் திணறினர்.
வான்டெர் துஸ்சென் (0), கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் (3 ரன்), பவுமா (6 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.
ஆட்ட நேர முடிவில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுக்கு 88 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.
விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் 32 ரன்களுடன் அவுட் ஆகாமல் உள்ளார். இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.