TAMIL
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணி 264 ரன்கள் முன்னிலை
தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது.
இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 269 ரன்களில் ஆட்டம் இழந்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்திருந்தது.
இந்த நிலையில் 3-வது நாளான நேற்று எஞ்சிய 2 விக்கெட்டையும் இழந்து தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 89 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை அள்ளினார். அவர் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்துவது இது 28-வது முறையாகும்.
இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 5 கேட்ச் செய்தார். இன்னிங்சில் 5 கேட்ச் செய்த 12-வது பீல்டர் ஆவார்.
அதே சமயம் 143 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 5 கேட்ச் செய்த முதல் இங்கிலாந்து பீல்டர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.
அடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது.
ஜாக் கிராவ்லி 25 ரன்னிலும், ஜோ டென்லி 31 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டாம் சிப்லியும், கேப்டன் ஜோ ரூட்டும் கைகோர்த்து அணிக்கு வலுவூட்டினர். 200 ரன்களை கடக்க வைத்த இவர்கள் 217 ரன்களை எட்டிய போது பிரிந்தனர்.
ஜோ ரூட் 61 ரன்களில் (98 பந்து, 7 பவுண்டரி) வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து விக்கெட் தடுப்பாளராக இறக்கப்பட்ட டாம் பெஸ் டக்-அவுட் ஆனார். அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 79 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 218 ரன்கள் சேர்த்து மொத்தம் 264 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது.
முதலாவது சதத்தை எதிர்நோக்கி உள்ள டாம் சிப்லி 85 ரன்களுடனும் (222 பந்து, 13 பவுண்டரி) களத்தில் நிற்கிறார்.
நார்ஜே 2 விக்கெட்டும், ரபடா, பிரிட்டோரியஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தற்போதைய சூழலில் இந்த டெஸ்டில் இங்கிலாந்தின் கையே ஓங்கியுள்ளது. பரபரப்பான 4-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.