TAMIL
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 262 ரன்கள் சேர்ப்பு
தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
செஞ்சூரியனில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நேற்று தொடங்கியது.
இங்கிலாந்து அணியில் காயமடைந்த தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்சுக்கு பதிலாக ஜாக் கிராவ்லி இடம் பிடித்தார்.
இதே போல் காயத்தால் அவதிப்படும் ஜோப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டு சுழற்பந்து வீச்சாளர் டாம் பெஸ் அழைக்கப்பட்டார்.
‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ஜாக் ராவ்லி (4 ரன்) நிலைக்கவில்லை.
அதன் பிறகு வந்த வீரர்கள் கணிசமான பங்களிப்பை அளித்த போதிலும் யாரும் சதம் அடிக்கும் அளவுக்கு பெரிய இன்னிங்சை ஆடத் தவறினர்.
தென்ஆப்பிரிக்க பவுலர்கள் கொடுத்த நெருக்கடியில் இங்கிலாந்துக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தது.
டாம் சிப்லி 34 ரன்னிலும், ஜோ டென்லி 38 ரன்னிலும், கேப்டன் ஜோ ரூட் 35 ரன்னிலும், பென் ஸ்டோக்ஸ் 47 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
நேற்றைய முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 89 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்துள்ளது. ஆலிவர் போப் 56 ரன்களுடனும் (132 பந்து, 7 பவுண்டரி) ஆண்டர்சன் 3 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
ஆலிவர் போப் கடைசி நேரத்தில் கேட்ச் ஆனார். ஆனால் ரபடா நோ-பாலாக வீசியது கண்டுபிடிக்கப்பட்டதால் 2-வது நாளிலும் பேட்டிங் செய்யும் அதிர்ஷ்டம் ஆலிபர் போப்புக்கு கிட்டியது.
தென்ஆப்பிரிக்கா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் பிலாண்டர், ரபடா, நார்ஜே, பிரிட்டோரியஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
இந்த டெஸ்டில் இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரராக ரோரி பர்ன்ஸ் களம் இறங்க இருந்தார். ஆனால் முந்தைய நாள் பயிற்சியின் போது கால்பந்து விளையாடியதில் காயமடைந்தார்.
இடது கணுக்காலில் வலியால் துடித்த அவருக்கு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து தென்ஆப்பிரிக்க தொடரில் இருந்து விலகியுள்ள அவர் தாயகம் திரும்புகிறார்.
இங்கிலாந்து வீரர்கள் போட்டிக்கு முன்பாக ஜாலியாக கால்பந்து ஆடும் போது காயத்தில் சிக்குவது அடிக்கடி நடந்துள்ளது.
இதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறும் விதமாக கால்பந்து விளையாடுவதை இனி முற்றிலும் தவிர்க்க அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.