TAMIL

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு 376 ரன்கள் இலக்கு

தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்து வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 284 ரன்களும், இங்கிலாந்து 181 ரன்களும் எடுத்தன.

103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்கா 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்திருந்தது.



இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சில் 61.4 ஓவர்களில் 272 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

அதிகபட்சமாக வான்டர் துஸ்சென் 51 ரன்களும், பிலாண்டர் 46 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 376 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய முடிவில் 41 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்துள்ளது. ரோரி பர்ன்ஸ் (77 ரன்), ஜோ டென்லி (10 ரன்) களத்தில் உள்ளனர்.



கைவசம் 9 விக்கெட் வைத்திருக்கும் இங்கிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 255 ரன்கள் தேவைப்படுகிறது.

இரு அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதால் இந்த டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.

ஆனால் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஜோஸ் பட்லர் ஆகியோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பது இங்கிலாந்துக்கு சற்று பின்னடைவாக அமைந்துள்ளது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது.

இதற்கிடையே பீல்டிங்கின் போது இடது கை மோதிர விரலில் காயமடைந்த தென்ஆப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ராம் எஞ்சிய தொடரில் இருந்து விலகியிருக்கிறார்.

விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதால் அவருக்கு அடுத்த வாரம் ஆபரேஷன் செய்யப்பட உள்ளது. இந்த காயம் குணமடைய குறைந்தது 2 மாதம் ஆகும்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker