TAMIL

தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை கோலியால் முறியடிக்க முடியும் – பிரெட்லீ சொல்கிறார்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட்லீ, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் சச்சின் தெண்டுல்கர், விராட் கோலி ஒப்பீடு குறித்து பேசியதாவது:-

இந்திய கேப்டன் விராட் கோலி தற்போது விளையாடுவதை போன்று இன்னும் 7-8 ஆண்டுகள் தொடர்ந்து விளையாடினால் சச்சின் தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை அவரால் முறியடிக்க முடியும்.

அதற்கு மூன்று விஷயங்களை கோலி கவனிக்க வேண்டி உள்ளது. ஒன்று திறமை. ஒரு பேட்ஸ்மேனாக கோலியிடம் நிறைய திறமை உண்டு. அதனால் இந்த விஷயத்தை நீக்கி விடலாம்.

அடுத்து முழு உடல்தகுதியுடன் இருப்பது.

இதுவும் கோலியிடம் இருக்கிறது. அடுத்து மனரீதியான பலம். அதாவது கடினமான தருணங்களையும், வெளிநாட்டில் கிரிக்கெட் ஆடும் போது குடும்பத்தினரை பிரிந்து இருப்பது போன்ற மனரீதியான சிரமங்களை சமாளிக்க வேண்டும்.

திறமை, மனோபலம், உடல்தகுதி மூன்றும் ஒருங்கிணைந்து இருக்கும்போது தெண்டுல்கரின் சாதனையை அவர் கடந்து விடுவார் என்று நம்புகிறேன்.

தெண்டுல்கரை பற்றி மீண்டும் பேசிக் கொண்டிருக்கும் போது இன்னொன்றையும் சொல்ல வேண்டும். தெண்டுல்கர் இங்கே கிரிக்கெட்டின் கடவுள்.

கடவுளை யாராவது மிஞ்ச முடியுமா? எனவே நாம் பொறுத்திருந்து பார்ப்போம் என்று பிரெட்லீ கூறினார்.

ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் தெண்டுல்கர் 100 சதங்களுடன் (ஒரு நாள் போட்டியில் 49, டெஸ்டில் 51 சதம்) முதலிடத்தில் உள்ளார். 31 வயதான விராட் கோலி இதுவரை 70 சதங்கள் (டெஸ்டில் 27, ஒரு நாள் போட்டியில் 43 சதம்) அடித்துள்ளார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker