கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, நேற்று முன்தினம் நடந்த சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணியின் கேப்டன் டோனியின் (11 ரன்) விக்கெட்டை வீழ்த்தினார்.
முட்டிப்போட்டு பந்தை விளாச முயற்சித்து டோனி கிளீன் போல்டு ஆனார்.
தமிழகத்தை சேர்ந்த 29 வயதான வருண் சக்ரவர்த்தி ரூ.4 கோடிக்கு கொல்கத்தா அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
இந்த சீசனில் இதுவரை 4 ஆட்டத்தில் ஆடி 5 விக்கெட் கைப்பற்றியுள்ள அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ரசிகர்களோடு அமர்ந்து ஐ.பி.எல். ஆட்டத்தை பார்த்து இருக்கிறேன். டோனியின் பேட்டிங்கை பார்க்கவே அப்போது அடிக்கடி செல்வது உண்டு.
இப்போது நானே அவருக்கு பந்து வீசியிருக்கிறேன். இது எனக்கு நம்ப முடியாத ஒரு தருணம். இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. இது 180 ரன்கள் எடுக்கக்கூடிய ஆடுகளம்.
பந்து பெரிய அளவில் சுழன்று திரும்பவில்லை. டோனியும் நன்றாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.
ஆனால் சரியான அளவில் பந்தை ‘பிட்ச்’ செய்து வீசினால் விக்கெட்டை வீழ்த்த வாய்ப்பு உண்டு என்று நினைத்தேன்.
நல்லவேளையாக திட்டத்தை கச்சிதமாக செயல்படுத்தி அவரது விக்கெட்டை கைப்பற்றினேன்.
அவருக்கு பந்து வீசிய போது எனக்குள் நெருக்கடியை உணர்ந்தேன்.
இந்த ஆட்டம் முடிந்ததும் டோனியுடன் உற்சாகமாக புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.
அவரை பற்றி தமிழில் ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன். தல…தல தான்.
இவ்வாறு வருண் சக்ரவர்த்தி கூறினார்.