CRICKETLATEST UPDATESNEWSTAMIL

தமிழகத்தை சேர்ந்த 8 பேர் உள்பட ஐ.பி.எல். ஏலத்துக்கான இறுதி பட்டியலில் 292 வீரர்கள்

 
மும்பை, 
 
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்ட இந்த போட்டியை இந்த முறை இந்தியாவில் நடத்துவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த போட்டிக்கான 8 அணிகளும் ஏற்கனவே தங்களுக்கு வேண்டிய வீரர்களை தக்கவைத்ததுடன், தேவையில்லாத வீரர்களை விடுவித்து விட்டன. அணிகளுக்கு இடையேயான வீரர்கள் பரிமாற்றமும் முடிந்து விட்டது.
 
இந்த நிலையில் ஐ.பி.எல். வீரர்கள் ஏலம் சென்னையில் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இந்த ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1,114 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்து இருந்தனர். அணி நிர்வாகத்தினருடன் கலந்து பேசி அதில் இருந்து ஏலத்துக்கான இறுதிபட்டியலை முடிவு செய்து ஐ.பி.எல். நிர்வாகம் நேற்று வெளியிட்டது.
 
ஏலப்பட்டியலில் 292 வீரர்கள்
 
ஏலத்துக்கான இறுதி பட்டியலில் மொத்தம் 292 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் 164 இந்திய வீரர்கள், 125 வெளிநாட்டு வீரர்கள், 3 அசோசியேட் நாடு வீரர்கள் அடங்குவார்கள். ஏலத்தில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கான அதிகபட்ச அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
அதிகபட்ச அடிப்படை விலை பட்டியலில் (ரூ.2 கோடி) ஹர்பஜன்சிங், கேதர் ஜாதவ் (இருவரும் இந்தியா), ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல் (இருவரும் ஆஸ்திரேலியா), ஷகிப் அல்-ஹசன் (வங்காளதேசம்), மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், ஜாசன் ராய், பிளங்கெட், மார்க்வுட் (5 பேரும் இங்கிலாந்து) ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள். 12 வீரர்களின் விலை ரூ.1½ கோடியாகவும், இந்தியாவின் ஹனுமா விஹாரி, உமேஷ் யாதவ் உள்பட 11 வீரர்களின் விலை ரூ.1 கோடியாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
ஸ்ரீசாந்த், முரளி விஜய்க்கு இடமில்லை
 
ஐ.பி.எல். சூதாட்ட பிரச்சினையில் சிக்கி 7 ஆண்டுகள் தடையை அனுபவித்து களம் திரும்பிய கேரளாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு இறுதி பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. சச்சின் தெண்டுல்கரின் மகன் அர்ஜூன் ரூ.20 லட்சம் அடிப்படை விலையுடன் பட்டியலில் நீடிக்கிறார்.
 
இந்த பட்டியலில் தமிழக வீரர்கள் ஜி.பெரியசாமி, ஹரி நிஷாந்த், ஷாருக்கான், எம்.சித்தார்த், சோனு யாதவ், அருண் கார்த்திக், பாபா அபராஜித், எம்.முகமது ஆகியோரும் இடம் பெற்று இருக்கிறார்கள். இவர்களின் தொடக்க விலை ரூ.20 லட்சமாகும். அதே சமயம் இந்திய அணிக்காக ஆடிய தமிழக வீரர் முரளிவிஜய் பெயர் இந்த முறை ஏலத்தில் இல்லை.
 
ஏலத்தில் வீரர்களை எடுக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதிகபட்சமாக ரூ.53.2 கோடியை கையிருப்பாக வைத்து இருக்கிறது. அந்த அணி 5 வெளிநாட்டினர் உள்பட 9 வீரர்களை வாங்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூ.19.9 கோடி கைவசம் உள்ளது. அந்த அணி ஒரு வெளிநாட்டினர் உள்பட 6 வீரர்களை தன்வசப்படுத்த முடியும். 8 அணிகளும் சேர்ந்து அதிகபட்சமாக மொத்தம் 61 வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியும்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker