TAMIL

தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: கர்நாடகா 336 ரன்னில் ஆல்-அவுட்

38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.இதில் தமிழ்நாடு – கர்நாடகா இடையிலான லீக் ஆட்டம் (பி பிரிவு) திண்டுக்கல் நத்தத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த கர்நாடகா தொடக்க நாளில் 6 விக்கெட்டுக்கு 259 ரன்கள் சேர்த்து இருந்தது.

2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய கர்நாடகா முதல் இன்னிங்சில் 336 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது. கடைசி கட்டத்தில் ஆல்-ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதம் 51 ரன்கள் (39 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார்.



தமிழகம் தரப்பில் ஆர்.அஸ்வின் 4 விக்கெட்டுகளும், விக்னேஷ், கே.சித்தார்த் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய தமிழக அணிக்கு அபினவ் முகுந்தும், முரளிவிஜயும் முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் (24 ஓவர்) திரட்டி அருமையான தொடக்கம் உருவாக்கித் தந்தனர். விஜய் 32 ரன்னிலும், அபினவ் முகுந்த் 47 ரன்னிலும் கிருஷ்ணப்பா கவுதமின் சுழலில் சிக்கினர். தொடர்ந்து கேப்டன் விஜய் சங்கர் 12 ரன்னிலும், பாபா அபராஜித் 37 ரன்னிலும் வெளியேறினர்.

தமிழக அணி முதல் இன்னிங்சில் 58 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இன்மையால் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக் கொள்ளப்பட்டது. அப்போது தினேஷ் கார்த்திக் (23 ரன்), விக்கெட் கீப்பர் ஜெகதீசன் (6 ரன்) களத்தில் இருந்தனர். கர்நாடகா தரப்பில் கிருஷ்ணப்பா கவுதம் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.



கேரள மாநிலம் தும்பாவில் நடக்கும் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் (ஏ பிரிவு) கேரளா முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 525 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. ராபின் உத்தப்பா (102 ரன்), கேப்டன் சச்சின் பேபி (155 ரன்) சதம் அடித்தனர். பின்னர் தனது முதல்இன்னிங்சை தொடங்கிய டெல்லி அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 23 ரன்கள் எடுத்துள்ளது.

வதோதராவில் நடக்கும் பரோடாவுக்கு எதிரான ஆட்டத்தில் (பி பிரிவு) முதல் நாளில் 8 விக்கெட்டுக்கு 362 ரன்கள் எடுத்திருந்த மும்பை அணி நேற்று தொடர்ந்து ஆடி 431 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய பரோடா அணி ஆட்ட நேர இறுதியில் 9 விக்கெட்டுக்கு 301 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் கேதர் தேவ்தார் 154 ரன்களுடன் (184 பந்து, 20 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் உள்ளார்.

சோவிமாவில் நடக்கும் மேகாலயாவுக்கு எதிரான ஆட்டத்தில் நாகலாந்து அணி முதல் இன்னிங்சில் 136 ரன்களில் சுருண்டது. மேகாலயா சுழற்பந்து வீச்சாளர் சஞ்சய் யாதவ் 9 விக்கெட்டுகளை அள்ளினார். இவர் டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் காஞ்சி வீரன்ஸ் அணிக்காக ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker