CRICKETLATEST UPDATESNEWSTAMIL

தந்தையானது சிறப்புமிக்க தருணம் – இந்திய கேப்டன் கோலி பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி காணொலி மூலம் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-ஆஸ்திரேலிய பயணத்தில் முதலாவது டெஸ்டுடன் நான் தாயகம் திரும்பினாலும், அணியுடனான எனது தொடர்பு எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. எந்த சூழலிலும் அது விட்டுப்போனதில்லை. எல்லா டெஸ்ட் போட்டிகளையும் பார்த்தேன். எனது மனைவிக்கு குழந்தை பிறப்புக்காக ஆஸ்பத்திரிக்கு டாக்டர் அழைக்கும் முன்பு வரை, பிரிஸ்பேன் டெஸ்டில் ஷர்துல் தாகூர்- வாஷிங்டன் சுந்தரின் பார்ட்னர்ஷிப்பை போனில் பார்த்துக் கொண்டு இருந்தேன். தந்தை என்ற அந்தஸ்தை எட்டியது, எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான, மிகச்சிறப்பு வாய்ந்த தருணம். அதை ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை தவறவிட்டதுடன் ஒப்பிட முடியாது. டெஸ்ட் போட்டியை தவறவிட்டதற்காக நான் கவலைப்படவில்லை.

ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக நீண்ட காலம் நீடிக்க வேண்டும் என்பதை எதிர்நோக்கி இருக்கிறோம். அவர்களிடம் இருந்து சிறந்த தொடக்கத்தை எதிர்பார்க்கிறோம். இந்த டெஸ்டில் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் ஆடுவார். ஆஸ்திரேலியாவில் முத்திரைபதித்த அவர் நல்ல நிலையில் இருக்கிறார்.

எனக்கும், ரஹானேவுக்கும் மட்டுமல்ல ஒட்டுமொத்த அணியினருடன் நம்பிக்கை அடிப்படையில் நட்புறவு இருக்கிறது. இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் நாங்கள் அனைவரும் உழைக்கிறோம். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ரஹானே தனது பொறுப்பை வெற்றிகரமாக நிறைவு செய்தார். அவர் அணிக்கு தலைமைதாங்கி வெற்றித் தேடித்தந்ததை பார்க்க வியப்பாக இருந்தது. நானும், ரஹானேவும் இணைந்து உற்சாகமாக பேட்டிங் செய்திருக்கிறோம். களத்தில் இருவரும் பரஸ்பர மரியாதையுடன் நடந்து கொள்வதை பார்த்து இருப்பீர்கள். களத்திற்கு வெளியேயும் இந்த உறவு நீடிக்கிறது.

நாட்டில் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அது பற்றி நாங்கள் பேசுவது உண்டு. இதே போல் டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் குறித்தும் அணி வீரர்களின் ஆலோசனை கூட்டத்தில் சிறிது நேரம் விவாதித்தோம். ஒவ்வொரு வீரர்களும் தங்களது கருத்தை தெரிவித்தனர். அதன் பிறகு டெஸ்ட்டுக்கான திட்டங்கள் குறித்து பேசினோம்.

இவ்வாறு கோலி கூறினார்.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறுகையில், ‘இந்திய வீரர் புஜாரா அற்புதமான வீரர். அவருடன் இணைந்து கவுண்டி கிரிக்கெட்டில் சில ஆட்டங்களில் விளையாடி நிறைய கற்று இருக்கிறேன். இந்திய அணியில் அங்கம் வகிக்கும் போது அவர் எவ்வளவு மதிப்புமிக்கவராக இருக்கிறார் என்பது தெரியும். அவரது விக்கெட் தான் எங்களுக்கு மிகப்பெரியது. நிச்சயம் கடும் சவாலாக இருக்கப்போகிறார்’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker