TAMIL
தடுமாறி மீண்டது நியூசிலாந்து ; இந்திய அணிக்கு 274 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம்
நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஆடுகிறது.
இதில் ஹாமில்டனில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.
இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்து அணியை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார்.
இதன்படி இந்திய அணி முதலில் பந்து வீசியது.
நியூசிலாந்து அணியின் துவக்கம் சிறப்பாக இருந்தது.
மார்டின் குப்தில் (79 ரன்கள்), நிகோலஸ் (41 ரன்கள்) என துவக்க ஆட்டக்காரர்கள் கணிசமான பங்களிப்பை அளித்தனர். ஆனால், அதன் பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இதனால், நியூசிலாந்து அணி 197 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதனால், 250 ரன்களுக்குள் அந்த அணி சுருண்டு விடும் என எதிர்பார்த்த நிலையில், ரோஸ் டெய்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து அணி சவாலான ஸ்கோரை எட்ட உதவினார்.
இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோஸ் டெய்லர் (73 ரன்கள்) எடுத்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 273 ரன்களை குவித்துள்ளது.
இதன் மூலம் இந்திய அணிக்கு 274 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பந்து வீச்சில் இந்திய அணி தரப்பில், சஹால் 3 விக்கெட்டுகளையும் தாகூர் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.