TAMIL

டோனியுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் திடீரென பகிர்ந்தது ஏன்? – கேப்டன் விராட்கோலி விளக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி, டோனியுடன் இருக்கும் வித்தியாசமான புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த வியாழக்கிழமை பகிர்ந்து இருந்தார். 2016-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-10 சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அரைஇறுதிக்கு முன்னேறிய போட்டியில் வெற்றி இலக்கை எட்டிய மகிழ்ச்சியான தருணத்தில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் விராட்கோலி தலையில் பேட்டை வைத்தபடி முழங்காலிட்ட நிலையில் இருப்பார். அவர் அருகில் டோனி நிற்பார். அந்த டுவிட்டர் பதிவில் விராட்கோலி, ‘அந்த ஆட்டத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. இந்த மனிதர் என்னை உடல் தகுதி தேர்வுக்கு ஓட வைப்பது போல் ஓட வைத்தார்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.



விராட்கோலியின் டுவிட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் காட்டு தீ போல் வேகமாக பரவியது. டோனி ஓய்வு பெற இருப்பதாகவும், அதை தான் விராட்கோலி சூசகமாக குறிப்பிட்டு இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி வைரலானது. இந்த தகவலில் உண்மை இல்லை. இது வதந்திஎன்று டோனியின் மனைவி சாக்‌ஷி உடனடியாக மறுத்தார்.

இந்த நிலையில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டியையொட்டி இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தர்மசாலாவில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது டோனியுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்தது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு விராட்கோலி பதில் அளிக்கையில், ‘நான் எதனையும் மனதில் வைத்துக்கொண்டு அந்த புகைப்படத்தை பகிரவில்லை. நான் வீட்டில் சகஜமாக அமர்ந்து கொண்டு அந்த படத்தை பதிவேற்றம் செய்தேன். அது செய்தியாக மாறிவிட்டது. இது எனக்கு ஒரு பாடமாகும். நான் பார்க்கும் கோணத்திலேயே மற்றவர்களும் பார்க்க வேண்டும் என்று அவசியமில்லை. அந்த ஆட்டம் மிகவும் சிறப்பானது. அது குறித்து நான் வெளிப்படையாக பேசியதில்லை. அதனால் தான் அந்த படத்தை பகிர்ந்தேன். ஆனால் மக்கள் வேறுவிதமாக எடுத்து கொண்டு விட்டார்கள்’ என்றார்.

அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் பட்டியலில் டோனி இடம் பெறுவாரா? என்று கேட்டதற்கு கோலி மழுப்பலாக பதில் அளித்து பேசுகையில், ‘நீங்கள் விரும்புகிறீர்களோ, இல்லையோ? ஆனால் எப்பொழுதும் அனுபவம் மிகவும் முக்கியமானது. வயது ஒரு நம்பர் தான். வயதுக்கும் திறைமைக்கும் சம்பந்தம் கிடையாது என்பதை கடந்த காலங்களில் பல வீரர்கள் நிரூபித்து காட்டி இருக்கிறார்கள். டோனியும் கூட அதனை நிறைய நேரங்களில் செய்து காட்டியுள்ளார்.

டோனி குறித்து ஒரு பெருமையான விஷயம் என்னவென்றால் அவர் எப்பொழுதும் இந்திய கிரிக்கெட்டின் நலன் பற்றி தான் சிந்தித்து கொண்டு இருப்பார். அணி நிர்வாகம் என்ன நினைக்கிறதோ? அதைத் தான் டோனியும் சிந்திப்பார். இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்து அவர்களது திறமையை வளர்க்க வேண்டும் என்ற நோக்கமும் அவருக்கு உண்டு. இன்னும் அவர் அப்படிப்பட்டவராகவே தான் இருக்கிறார். அவரால் எவ்வளவு காலம் விளையாட முடியுமோ? அதுவரை தொடர்ந்து விளையாடலாம். அவர் இன்னும் மதிப்பு மிக்க வீரராகவே இருக்கிறார். அவர் எப்போது ஓய்வு பெறுவார் என்பது முற்றிலும் அவரது தனிப்பட்ட விஷயமாகும். அது குறித்து யாரும் கருத்து சொல்லக்கூடாது’ என்று கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker