TAMIL
டெஸ்ட் கிரிக்கெட் விதிமுறையை மாற்றக்கூடாது: பென் ஸ்டோக்ஸ் வலியுறுத்தல்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரருமான பென் ஸ்டோக்ஸ், ராஜஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகர் சோதியுடன் கலந்துரையாடினார். அப்போது பென் ஸ்டோக்ஸ் கூறியதாவது:-
கிரிக்கெட் விளையாட்டில் டெஸ்ட் கிரிக்கெட்டே எல்லாவற்றிலும் முதன்மையானது. குறுகிய வடிவிலான போட்டிகளால் டெஸ்ட் கிரிக்கெட் மடிந்து வருவதாக சமீப காலமாக நிறைய பேசப்படுகின்றன.
இது எங்கிருந்து வருகிறது என்பது தெரியவில்லை. டெஸ்ட் போட்டி எப்படிப்பட்டது என்பதை ஒவ்வொரு வீரர்களிடம் கேளுங்கள்.
விராட் கோலி, ஜோ ரூட் உள்ளிட்டோர் களத்தில் நமது திறமையை உண்மையிலேயே சோதிக்கக்கூடிய போட்டி டெஸ்ட் தான் என்று பேசியதை அறிவேன்.
கிரிக்கெட்டில் நீங்கள் எப்படி, எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை இது தான் உணர்த்தும்.
என்னை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் தான் தூய்மையான வடிவம். டெஸ்ட் கிரிக்கெட் இப்போது எப்படி இருக்கிறதோ அப்படியே தொடர வேண்டும்.
5-ல் இருந்து 4 நாட்களாக குறைப்பது, விதிகளை மாற்றுவது என்று எதுவும் செய்யக்கூடாது. டெஸ்ட் கிரிக்கெட் மாற்றப்பட்டால் அது மிகவும் மோசமான நாளாக இருக்கும்.
வருங்காலத்தில் டெஸ்ட் போட்டி விதிமுறைகளை மாற்றினால், அவர்கள் இதை ‘ஈசி கிரிக்கெட்’ என்று தான் அழைக்க வேண்டும்.
சூழ்நிலைக்கு தகுந்தபடி தன்னை மாற்றிக் கொண்டு விளையாடக்கூடிய, தற்போது உலகின் சிறந்த ஒரு நாள் போட்டி வீரர்களில் ஒருவர் ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து).
எந்த பந்து வீச்சையும் மைதானத்தின் நாலாபுறமும் சிதறடிக்கக்கூடிய திறமை சாலி. அதே சமயம் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடியது போன்றும் (நிதான பேட்டிங்) அவரால் விளையாட முடியும்.
ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் இன்னும் வித்தியாசமான ஆட்டக்காரராகவே தெரிகிறார்.
அவருக்கு எதிராக விளையாடும் போது சரி, அவருடன் இணைந்து (ராஜஸ்தான் அணிக்காக) ஆடும் போதும் சரி இதை உணர்கிறேன்.
புத்திசாலித்தனமாகவும், கொஞ்சம் வித்தியாசமான ஆட்டக்காரராகவும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இவை இரண்டும் கலந்த கலவை ஸ்டீவன் சுமித்.
இவ்வாறு பென் ஸ்டோக்ஸ் கூறினார்.