TAMIL

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 4 நாட்களாக குறைக்கக்கூடாது தெண்டுல்கர் எதிர்ப்பு

143 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 5 நாட்களில் இருந்து 4 நாட்களாக குறைக்கலாம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சமீபத்தில் யோசனை தெரிவித்து இருந்தது.

2023-ம் ஆண்டு முதல் 4 நாட்கள் டெஸ்ட் போட்டியை அமல்படுத்த ஐ.சி.சி.பரிசீலனை செய்து வருகிறது.

துபாயில் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் 4 நாட்கள் டெஸ்ட் போட்டி குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.



டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 4 நாட்களாக குறைப்பதற்கு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் உள்பட பலரும் ஆட்சேபனை தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரும் டெஸ்ட் போட்டியை 4 நாட்களாக குறைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

டெஸ்ட் கிரிக்கெட் அதிகம் விளையாடிய வீரர் மற்றும் அந்த ஆட்டத்தின் ஆர்வலர் என்ற முறையிலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைமுறையில் மாற்றம் எதுவும் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன்.

இத்தனை ஆண்டுகளாக டெஸ்ட் போட்டி எந்த மாதிரி நடைபெற்றதோ? அதே நிலைமை தொடர வேண்டும்.

டெஸ்ட் போட்டியில் ஒருநாள் குறைக்கப்பட்டால் அதனை குறுகிய வடிவிலான போட்டியின் ஒரு நீண்ட வடிவம் என்றே பேட்ஸ்மேன் சிந்திக்க தொடங்குவார்கள்.



2-வது நாள் ஆட்டம் உணவு இடைவேளை வந்தாலே இன்னும் 2½ நாள் தான் உள்ளது என்ற மனநிலை ஏற்பட்டு சிந்தனையும், ஆட்டத்தின் போக்கும் மாறி விடும்.

5-வது நாள் பிட்ச்சை சுழற்பந்து வீச்சாளர்களிடம் இருந்து பறிப்பது முதல் நாள் பிட்ச்சை வேகப்பந்து வீச்சாளர்களிடம் இருந்து பறிப்பது போன்றதாகும்.

கடைசி நாளில் தேனீர் இடைவேளைக்கு பிறகு எந்தவொரு சுழற்பந்து வீச்சாளர்களும் பந்து வீச விரும்புவார்கள்.

ஏனெனில் 5-வது நாளில் ஆடுகளத்தின் தன்மை வெகுவாக மாற்றமடைந்து சுழலுக்கு ஏற்றவகையில் பந்து நன்கு திரும்பும், பவுன்ஸ் ஆகும்.

ஆனால் முதல் 2 நாட்களில் இந்த மாதிரி இருக்காது.

டெஸ்ட் போட்டியை திடீரென ஏன்? 4 நாட்களாக மாற்ற யோசிக்கிறார்கள் என்பதற்கான காரணத்தை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.



ஒருவேளை வணிகநலன் சார்ந்து இதனை செய்ய நினைக்கலாம்.

ரசிகர்களுக்கு சுவாரஸ்யத்தை கூட்டுவதற்கு கூட இருக்கலாம். ரசிகர்களை கவர வேண்டியது முக்கியம் தான்.

ஆனால் எல்லா வகையிலான ரசிகர்களுக்காகவும் ஒருநாள் மற்றும் 20 போட்டிகள் இருக்கின்றன.

தற்போது 10 ஓவர் போட்டிகள் கூட வந்து விட்டது.

டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களுக்கு என்று நாம் ஏதாவது விட்டு வைக்க வேண்டாமா?.

டெஸ்ட் கிரிக்கெட் தான் ஒரு பேட்ஸ்மேனின் முழுமையான திறமை மற்றும் மனஉறுதியை சோதிக்கும் களமாக உள்ளது.

இதில் தான் கடினமான ஆடுகளத்தில் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டியது அவசியமானதாகும்.



டெஸ்ட் போட்டிக்கு தரமான ஆடுகளம் அமைத்தாலே விறுவிறுப்பும், சுவராஸ்யமும் தானாக வந்து விடும்.

நல்ல பிட்ச்களை அமைப்பது தான் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களை வரவழைக்கும் ஒரே வழியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker