TAMIL
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஷமி, மயங்க் அகர்வால் முன்னேற்றம்
டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீரர் முகமது ஷமி முதல்முறையாக டாப்-10 இடத்திற்குள் நுழைந்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் மயங்க் அகர்வால் 11-வது இடத்துக்கு முன்னேறினார்.
இந்தூரில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் டாப்-10 இடங்களில் மாற்றம் ஏதுமில்லை. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் 937 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய கேப்டன் விராட் கோலி இந்தூர் டெஸ்டில் ‘டக்-அவுட்’ ஆனதால் 14 புள்ளிகளை பறிகொடுத்துள்ளார். இருப்பினும் தரவரிசையில் மாற்றமின்றி 2-வது இடத்தில் (912 புள்ளி) தொடருகிறார்.
வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் 243 ரன்கள் குவித்து சாதனை படைத்த இந்திய தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் கிடுகிடுவென 7 இடங்கள் எகிறி 691 புள்ளிகளுடன் 11-வது இடத்தை பிடித்துள்ளார். இதுவரை 8 டெஸ்டில் ஆடியுள்ள 28 வயதான மயங்க் அகர்வால் 858 ரன்கள் சேர்த்துள்ளார்.
முதல் 8 டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் அகர்வால் 8-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதே டெஸ்டில் அரைசதம் அடித்த இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 4 இடங்கள் முன்னேறி 35-வது இடத்தில் உள்ளார். டாப்-10 இடத்திற்குள் 4 இந்திய பேட்ஸ்மேன்கள் அங்கம் வகிப்பது கவனிக்கத்தக்கது.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதல் 6 இடங்களில் மாற்றமில்லை. ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் 908 புள்ளிகளுடன் முதலிடத்தில் பயணிக்கிறார். வங்காளதேச டெஸ்டில் இரு இன்னிங்சையும் சேர்த்து 7 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி (790 புள்ளி) 8 இடங்கள் அதிகரித்து 7-வது இடத்துக்கு வந்துள்ளார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த தரநிலை இதுவாகும்.
அத்துடன் கபில்தேவ் (877 புள்ளி), ஜஸ்பிரித் பும்ரா (835 புள்ளி) ஆகியோருக்கு பிறகு இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் அதிக புள்ளிகளை எடுத்தவர் என்ற சிறப்பும் ஷமியின் வசம் ஆகியுள்ளது. மற்ற இந்திய பவுலர்கள் இஷாந்த் ஷர்மா (20-வது இடம்), உமேஷ் யாதவ் (22-வது இடம்) தலா ஒரு இடம் ஏற்றம் கண்டுள்ளனர். சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மாற்றமின்றி 10-வது இடம் வகிக்கிறார்.
டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் முதல் 3 இடங்களில் முறையே ஜாசன் ஹோல்டர் (வெஸ்ட் இண்டீஸ்), ரவீந்திர ஜடேஜா (இந்தியா), பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) ஆகியோர் உள்ளனர். இந்திய வீரர் அஸ்வின் ஒரு இடம் உயர்ந்து 4-வது இடத்தை பிடித்துள்ளார்.
அடுத்ததாக இந்தியா-வங்காளதேசம் 2-வது டெஸ்ட் (நவ.22-26), ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் (நவ.21-25), இங்கிலாந்து-நியூசிலாந்து முதலாவது டெஸ்ட் (நவ.21-25) ஆகிய டெஸ்ட் போட்டிகள் இந்த வாரத்தில் நடக்கின்றன. இந்த போட்டிகளின் முடிவு வீரர்களின் தரவரிசையிலும் எதிரொலிக்கும்.