CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL

டெல்லிக்கு எதிராக நாங்கள் நிறைவான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் – ரோகித் சர்மா

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு துபாயில் நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் 57 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி 6-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. இந்த சீசனில் மும்பை அணி, டெல்லியை தோற்கடித்தது இது 3-வது முறையாகும்.

இதில் மும்பை நிர்ணயித்த 201 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்களே எடுத்து பணிந்தது. தோல்வி அடைந்த டெல்லி அணிக்கு இறுதி சுற்றை எட்ட இன்னொரு வாய்ப்பு உள்ளது. 4 ஓவர்கள் பந்து வீசி ஒரு மெய்டனுடன் 14 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகன் விருது பெற்றார். அத்துடன் இந்த சீசனில் இதுவரை 27 விக்கெட்டுகளை அறுவடை செய்து இருக்கும் அவர் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவருக்கான ஊதா நிற தொப்பியை டெல்லி அணி வீரர் காஜிசோ ரபடாவிடம் (25 விக்கெட்) இருந்து கைப்பற்றினார். மேலும் ஐ.பி.எல். போட்டியில் ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய பவுலர் என்ற சாதனையையும் பும்ரா தன்வசப்படுத்தினார். இதற்கு முன்பு 2017-ம் ஆண்டில் ஐதராபாத் அணி வீரர் புவனேஷ்வர் குமார் 26 விக்கெட்டுகள் வீழ்த்தியதே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

வெற்றிக்கு பிறகு மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘இதுவரையில் இதுதான் நாங்கள் வெளிப்படுத்திய நிறைவான ஆட்டம் என்று நினைக்கிறேன். 2-வது ஓவரில் நான் ஆட்டம் இழந்த போதும், குயின்டான் டி காக், சூர்யகுமார் யாதவ் உத்வேகத்துடன் பேட்டிங் செய்த விதம் அருமையாக இருந்தது. சூர்யகுமார் பேட்டிங் மூலம் எங்களது நெருக்கடியை போக்கும் முக்கியமான வீரர். இறுதி கட்ட ஓவர்களில் பேட்டிங்கில் காட்டிய தீவிரமும், அதனை தொடர்ந்து பந்து வீச்சில் துல்லியமாக செயல்பட்டதும் பிரமாதமாக இருந்தது. நாங்கள் வித்தியாசமான அணி என்பதால் ஒருபோதும் மனதில் இலக்கை நினைக்கவில்லை. நாங்கள் வித்தியாசமாக விளையாட விரும்புகிறோம். ஆட்டத்தின் போக்குக்கு தகுந்தபடி ஆடுவது என்று நினைத்து செயல்பட்டோம். 20 ஓவர் போட்டியை பொறுத்தமட்டில் உத்வேகம் எப்பொழுதும் முக்கியமானதாகும். எதிரணியை நோக்கி உத்வேகம் மாறுவதை ஒருபோதும் நாங்கள் விரும்புவது கிடையாது. இஷான் கிஷன் நல்ல பார்மில் உள்ளார். எனவே அச்சமின்றி எதிரணிக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் விளையாடுமாறு ‘டைம் அவுட்’ நேரத்தில் அவருக்கு தகவல் அனுப்பினோம். அவரும் அதனை சரியாக செய்தார். ஹர்திக் பாண்ட்யாவும் சூப்பர் ஷாட்களை ஆடினார்.

பல திறமை வாய்ந்த வீரர்கள் எங்கள் அணியில் இருப்பதால் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யவும், பவுலர்களை சுழற்சி முறையில் எங்கள் விருப்பப்படி பயன்படுத்தவும் முடிகிறது. டிரென்ட் பவுல்ட் காயம் பெரிதாக தெரியவில்லை. அவர் நன்றாக இருக்கிறார். இறுதிப்போட்டியில் அவர் களம் இறங்குவார். பும்ரா போன்ற பவுலர் அணியில் இருந்தால் கேப்டனின் பணி எளிதாகி விடும். பும்ரா, டிரென்ட் பவுல்ட் ஆகியோர் உயர்மட்ட பார்மில் உள்ளனர். எங்களது திட்டங்களை உள்வாங்கிக் கொண்டு சிறப்பாக செயல்படுத்திய அவர்களுக்கு தலைவணங்குகிறேன்’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker