CRICKETLATEST UPDATESNEWSTAMIL
டி20 உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடிக்க விரும்புகிறேன்: ஜோ ரூட்
இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ஒயிட்-பால் கிரிக்கெட் அணிக்கென ஒரு கேப்டனையும், டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கென ஒரு கேப்டனையும் நியமித்துள்ளது. ஓரளவிற்கு இரண்டும் வெவ்வேறு அணிகள் என்றே சொல்லலாம். ஒயிட்-பால் அணிகளுக்கு மோர்கன் கேப்டனாகவும், டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஜோ ரூட் கேப்டனாகவும் உள்ளனர்.
ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜாஃப்ரா ஆர்ச்சர் போன்றவர்கள் மட்டுமே மூன்று வடிவிலான கிரிக்கெட் அணியிலும் இடம்பிடித்துள்ளனர்.
கொரோனா காலத்திற்குப்பின் டெஸ்ட் அணி கேப்டனும், இங்கிலாந்தின் தலைசிறந்த வீரருமான ஜோ ரூட்டிற்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 தொடரில் இடம் கிடைக்கவில்லை.
இதனால் அவருடைய டி20 கிரிக்கெட் வாழ்க்கை அவ்வளவுதான் என கருதப்படுகிறது. ஆனால் இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையில் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜோ ரூட் கூறுகையில் ‘‘என்னை பொறுத்தவரைக்கும் முக்கியமான விசயம் என்னவெனில், இங்கிலாந்து அணி உலகக்கோப்பைக்கு வலுவான வீரர்களை கொண்ட அணியாக செல்ல வேண்டும் என்பதுதான். நானும் அணியில் இடம் பிடிப்பேன் என நம்புகிறேன்.
உண்மையிலேயே உலகக்கோப்பைக்கான அணியில் இடம் பிடிக்க விரும்புகிறேன். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாட விரும்புகிறேன். எல்லாமே வித்தியாசமான சவால்கள்.
எனக்கு கடந்த சில வருடங்களாக அதிக அளவில் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், விளையாடும் சில வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அவர்கள் அற்புதமான வீரர்கள். வாய்ப்பு கிடைக்க தகுதியானவர்கள். ஆனால், எனக்கு வாய்ப்பு கிடைத்தால் அதிகமான ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன்’’ என்றார்.