CRICKETLATEST UPDATESNEWSTAMIL

டி நடராஜன் 8 நோ-பால்: சந்தேகத்தை கிளப்பிய வார்னே- கொதித்து எழுந்த டுவிட்டர்வாசிகள்

இந்திய அணிக்குள் நெட் பந்து வீச்சாளராக இடம் பெற்ற நடராஜன் ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர் வரை தனது தனித்திறமையான பந்துவீச்சால் முன்னேறியது குறித்து ஐசிசி, பிசிசிஐ பாராட்டு தெரிவித்துள்ளன.

பிரிஸ்பேனில் தற்போது இந்தியா, ஆஸி. அணிகளுக்கு இடையே 4-வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கின்றன. நாளை கடைசி நாள் ஆட்டம் மட்டுமே இருக்கும் நிலையில் வெற்றி யாருக்கு எனப் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பிரிஸ்பேன் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் இன்னிங்சில் நடராஜன் 6 நோ-பால்களை வீசினார். 2 நோபால்களை இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் வீசினார்.

8 நோ-பால்களில் ஐந்து முறை அவர் வீசிய ஓவரின் முதல் பந்து நோ-பாலாக அமைந்தது. இதைப்பார்த்த வர்ணனையாளர் பிரிவில் இருந்த ஷேன் வார்னே, டி நடராஜன் வீசிய நோ-பால்கள் சந்தேகத்தை எழுப்புகிறது எனத் தெரிவித்துள்ளார்.

வர்ணனையாளர் அறையில் இருந்த பேசுகையில், “நடராஜன் பந்து வீசும்போது என் கண்களுக்கு ஏதோ வித்தியாசமாகத் தெரிகிறது. நடராஜன் 8 நோ-பால்களை வீசியுள்ளார். அனைத்து நோ-பால்களுமே மிகப்பெரியவை. அதில் 5 நோ-பால்கள் ஓவரின் முதல் பந்திலேயே வீசப்பட்டுள்ளது. நாமெல்லாம் நோ-பால் வீசியிருக்கிறோம். ஆனால், ஓவரின் முதல் பந்திலேயே 5 நோ-பால்கள் வீசியதுதான் வித்தியாசமாக, சுவாரஸ்யமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

நடரஜான் நோ-பால் வீசியது இயல்பான சம்பவம். அதிலும் முதன்முதலாக டெஸ்ட் போட்டிக்குள் அறிமுகமாகும் வீரர் பதற்றத்தில் நோ-பால் வீசுவது இயல்பு. ஆனால், இதை மறைமுகமாக ஸ்பாட் பிக்சிங்குடன் தொடர்புபடுத்தி வார்னே சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார்.

மார்க் வாக், ஸ்டீவ் வாக் ஆகியோருடன் விளையாடும்போது, ஸ்பாட் பிக்சிங் புகார்களைச் சந்திக்கவில்லையா. இலங்கையில் சிங்கர் கோப்பை நடந்தபோது, புக்கிகளுக்கு ஆடுகளத்தின் தன்மை, காலநிலை போன்ற தகவல்களை வழங்கி மார்க் வாக், வார்னே சிக்கவில்லையா. அப்போது வார்னே மீது எழுந்த புகாருக்கு இதுவரை விளக்கம் இல்லை.

ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் பந்தில் உப்புக் காகிதத்தைத் தேய்த்து ஓராண்டு தடை பிறப்பிக்கப்பட்டபோது, தங்கள் நாட்டு வீரர்களின் ஒழுக்கத்தைப் பற்றி வார்னே வாய் திறக்கவில்லை.

ஆனால், ஓராண்டுக்குப் பின் ஸ்மித்தை அணியில் சேர்க்க மட்டும் வார்னே பரிந்துரைத்தார்.

ஆனால், நடராஜன் போன்ற எளிமையான குடும்பத்தில், கடினமான குடும்பப் பின்னணியில் வளர்ந்து, இந்திய அணியில் இடம் பெற்று சாதிக்கும் தறுவாயில் ஆஸ்திரேலிய வீரர் வார்னே குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

முத்தையா முரளிதரன், சுனில் நரைன் போன்ற பல ஆசிய வீரர்கள் சாதிக்கும்போது ஆஸ்திரேலிய நடுவர்களும், வீரர்களும் இதுபோன்ற வீண் குற்றச்சாட்டுகளையும், சேற்றை வாரி இறைப்பதும் தொடர்ந்து வருகிறது.

இவ்வாறு டுவிட்டர்வாசிகள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

வர்ணனையாளர் ஹர்ஸா போக்லே-வுக்கு ரீட்வீட் செய்து ரசிகர் ஒருவர், “ஹர்ஸா தயவுசெய்து வார்னேவுக்குப் பதிலடி கொடுங்கள். நடராஜன் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக சந்தேகத்தைக் கிளப்புகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

“நடராஜனை ஸ்பாட் பிக்சிங் புகாரில் சேர்க்கும்போதே, உங்களின் தரம் என்னவென்று தெரிந்துவிட்டது” என ரசிகர் ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“நடராஜன் குறித்து தரக்குறைவான குற்றச்சாட்டு கூறிய மீது பிசிசிஐ கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ரசிகர்கள் கண்டித்துள்ளனர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker