TAMIL
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது
16 அணிகள் பங்கேற்றுள்ள 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.
லீக் சுற்று முடிவடைந்து கால்இறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கியது.
போட்செப்ஸ்ட்ரூமில் நடந்த முதலாவது கால்இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியன்
ஆஸ்திரேலியாவுடன் மோதியது.
‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கம் திருப்திகரமாக அமையவில்லை.
தொடக்க ஆட்டக்காரர் யஷாஸ்வி ஜெய்ஸ்வால் நிலைத்து நின்று ஆட இன்னொரு முனையில் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன.
சக்சேனா (14 ரன்), திலக் வர்மா (2 ரன்), கேப்டன் பிரியம் கார்க் (5 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. அரைசதத்தை கடந்த ஜெய்ஸ்வால்
62 ரன்களில் (82 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) கிளன் போல்டு ஆக, நெருக்கடி உருவானது.
ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 114 ரன்களுடன் பரிதவித்ததை பார்த்த போது, இந்திய அணி 200 ரன்களை தொடுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால் கடைசிகட்ட வீரர்கள் அணியை காப்பாற்றி கவுரவமான நிலைக்கு உயர்த்தினர். குறிப்பாக சித்தேஷ் வீர் (25 ரன்), ரவி
பிஷ்னோய் (30 ரன்), அதர்வா அங்கோல்கர் (55 ரன், 54 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர், நாட்-அவுட்) அணி 200 ரன்களை கடப்பதற்கு
பக்கபலமாக இருந்தனர்.
50 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் சேர்த்தது.
அடுத்து 234 ரன்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு முதல் ஓவரிலேயே பேரதிர்ச்சி காத்திருந்தது.
வேகப்பந்து வீச்சாளர் கார்த்திக் தியாகி வீசிய முதல் பந்திலேயே பிராசர் மெக்குர்க் (0) ரன்-அவுட் ஆனார்.
அதே ஓவரில் கேப்டன் மெக்கன்சி ஹார்வி (4 ரன்), லாச்லம் ஹெர்னி (0) ஆகியோரும் வீழ்ந்தனர்.
கார்த்திக் தியாகி தனது அடுத்த ஓவரில் ஆலிவர் டேவிசையும் (2 ரன்) காலி செய்தார்.
17 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்த ஆஸ்திரேலிய அணியை மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சாம் பேனிங், மீட்டெடுத்தார்.
அவசரம் காட்டாமல் ஏதுவான பந்துகளை மட்டும் எல்லைக்கோட்டுக்கு விரட்டிய அவருக்கு விக்கெட் கீப்பர்ட் பாட்ரிக் ரோவ் (21 ரன்),
லியாம் ஸ்காட் (35 ரன்) ஓரளவு ஒத்துழைப்பு தந்தனர்.
கடைசி 10 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 85 ரன்கள் தேவைப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் ஒரே நம்பிக்கையாக களத்தில் போராடிக் கொண்டிருந்த சாம் பேனிங் (75 ரன், 127 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) 42-வது ஓவரில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார்.
அத்துடன் அவர்களின் நம்பிக்கையும் தகர்ந்து போனது.
அந்த அணி 43.3 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் இந்தியா 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து அரைஇறுதிக்கு முன்னேறியது.
4 முறை சாம்பியனான இந்தியா ஜூனியர் உலக கோப்பை தொடரில் அரைஇறுதியை எட்டுவது இது 9-வது முறையாகும்.
இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் கார்த்திக் தியாகி 4 விக்கெட்டுகளும், ஆகாஷ் சிங் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இந்திய அணி அரைஇறுதியில் பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளில் ஒன்றை சந்திக்கும்.
இன்று நடக்கும் 2-வது கால்இறுதியில் வெஸ்ட் இண்டீஸ்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.