TAMIL
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி கால்இறுதிக்கு தகுதி
13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன.
‘டி’ பிரிவில் நடந்த ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுக்கு 299 ரன்கள் குவித்தது.
கேப்டன் பிரைஸ் பார்சன்ஸ் (84 ரன்), லுக் பியூபோர்ட் (85 ரன்) அரைசதம் அடித்தனர். அடுத்து களம் இறங்கிய ஐக்கிய அரபு அமீரகம் 23.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 112 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால் ‘டக்வெர்த்-லீவிஸ்’ விதிமுறைப்படி தென்ஆப்பிரிக்கா 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
2-வது வெற்றியை ருசித்த தென்ஆப்பிரிக்கா கால்இறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.
‘ஏ’ பிரிவு ஆட்டம் ஒன்றில் குட்டி அணியான ஜப்பானை வெறும் 43 ரன்னில் சுருட்டிய இலங்கை அணி அந்த இலக்கை 8.3 ஓவர்களில் எட்டி ஆறுதல் வெற்றி பெற்றது.
இதே போல் இங்கிலாந்து அணியும் (பி பிரிவு) அறிமுக அணியான நைஜீரியாவை 58 ரன்னில் முடக்கி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி கண்டது.
‘சி’ பிரிவில் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்திய திருப்தியோடு நடையை கட்டியது.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் கால்இறுதிக்கு முன்னேறியது.
கால்இறுதி ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் இந்தியா-ஆஸ்திரேலியா (ஜன.28-ந்தேதி), வெஸ்ட் இண்டீஸ்-நியூசிலாந்து (ஜன.29-ந் தேதி), தென்ஆப்பிரிக்கா-வங்காளதேசம் (ஜன.30-ந் தேதி), பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் (ஜன.31-ந் தேதி) அணிகள் மோதுகின்றன.