TAMIL
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: ஜப்பானை 41 ரன்னில் சுருட்டி பந்தாடியது இந்தியா
13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக் கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் புளோம்பாண்டீனில் நேற்று நடந்த தொடரின் 11-வது லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) நடப்பு சாம்பியன் இந்தியா, புதுமுக அணியான ஜப்பானை எதிர்கொண்டது.
‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் பிரியம் கார்க் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த கிரிக்கெட்டில் கத்துக்குட்டியான ஜப்பான் அணி எதிர்பார்த்தது போலவே சமாளிக்க முடியாமல் திண்டாடியது.
அந்த அணி வீரர்கள் களம் இறங்குவதும் வெளியேறுவதுமாக விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். 22.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஜப்பான் அணி 41 ரன்னில் சுருண்டது.
ஜூனியர் உலக கோப்பை போட்டியில் 2-வது குறைந்த ஸ்கோர் இதுவாகும்.
அந்த அணியில் ஒரு பேட்ஸ்மேன் கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை.
அதிகபட்சமாக நோகுச்சி, கென்டோ டோபெல் தலா 7 ரன் எடுத்தனர்.
‘எக்ஸ்டிரா’ வகையில் 12 வைடு உள்பட 19 ரன்கள் ஜப்பானுக்கு கிடைத்தது.
இல்லாவிட்டால் அந்த அணியின் ஸ்கோர் இன்னும் மோசமாகியிருக்கும்.
இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரவிபிஷ்னோய் 8 ஓவர்கள் பந்து வீசி 3 மெய்டனுடன் 5 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.
வேகப்பந்து வீச்சாளர்கள் கார்த்திக் தியாகி 3 விக்கெட்டுகளும், ஆகாஷ் சிங் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இந்த எளிய இலக்கை இந்திய அணி 4.5 ஓவர்களில் எட்டிப்பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது.
ஜெய்ஸ்வால் 29 ரன்னுடனும், குஷக்ரா 13 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
இந்திய அணிக்கு இது 2-வது வெற்றியாகும்.
ஏற்கனவே தொடக்க ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியிருந்தது. இதன் மூலம் இந்தியா ஏறக்குறைய கால்இறுதியை உறுதி செய்து விட்டது.
இந்திய அணி தனது கடைசி லீக்கில் நியூசிலாந்தை நாளை மறுதினம் சந்திக்கிறது.
ஜப்பான் கிரிக்கெட் வீரர் கென்டோ டோபெல் தனது 17-வது பிறந்த நாளையும், இந்திய விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் 19-வது பிறந்த நாளையும் நேற்று கொண்டாடினர். கேக்கை முகத்தில் பூசி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.
போட்செப்ஸ்ரூமில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் (சி பிரிவு) வங்காளதேச அணி, ஸ்காட்லாந்துடன் மோதியது.
டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 30.3 ஓவர்களில் 89 ரன்னில் முடங்கியது.
வங்காளதேச இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ரகிபுல் ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதில் கெஸ் சஜத் (7 ரன்), ராபர்ட்சன் (0), சார்லி பீட் (0) ஆகியோரை வரிசையாக வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்ததும் அடங்கும்.
தொடர்ந்து களம் இறங்கிய வங்காளதேச அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பெற்றது.
இன்றைய ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா-கனடா, ஆப்கானிஸ்தான்- ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான்-ஜிம்பாப்வே, நியூசிலாந்து- இலங்கை அணிகள் மோதுகின்றன.